அரசின் சின்னங்களை அங்கீகாரமின்றி பயன்படுத்துவது  அவமானம் - ஐகோர்ட் கருத்து

பதவிக்காக பணம் பெறுவதும், விஐபி அல்லது உயர் பதவியில் உள்ளவர் போல தோற்றத்தை உருவாக்குவதும் அவமானகரமானது

Nov 24, 2023 - 13:15
Nov 24, 2023 - 15:47
அரசின் சின்னங்களை அங்கீகாரமின்றி பயன்படுத்துவது  அவமானம் - ஐகோர்ட் கருத்து

மத்திய, மாநில அரசுகளின் எந்த அங்கீகாரமும் இல்லாத ஒரு அமைப்பு, அரசின் சின்னங்களை பயன்படுத்துவதும், விஐபி அல்லது உயர் பதவியில் உள்ளவர் போல தோற்றத்தை உருவாக்குவதும் அவமானகரமானது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சேலத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் சிறுகுறு தொழில்கள் வளர்ச்சி கவுன்சில் என்ற அமைப்பின் தேசிய தலைவரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துராமன் என்பவரும், தேசிய செயலாளராக உள்ள பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த துஷ்யந்த் யாதவ் ஆகியோர் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.இந்த நிகழ்ச்சியில் பாஜகவைச் சேர்ந்த நடிகை நமீதா, தனது கணவர் சவுந்திரியுடன் கலந்துகொண்டார்.

அரசு முத்திரை, தேசிய கொடி, பிரதமர் படம், எம்.எஸ்.எம்.இ. அமைப்பின் முத்திரை ஆகியவற்றை பயன்படுத்தி நிகழ்ச்சி நடத்துவதாகவும், இதை நம்பி சிறு குறு முதலீட்டாளர்களிடம் வசூலித்த 50 லட்சத்தை முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் ஆகியோர், 9 லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்த நிலையில் மீதத் தொகை வழங்கவில்லை என சூரமங்கலம் காவல்துறையில்  கோபால்சாமி என்பவர் புகார்  அளித்திருந்தார்.

பின்னர் இந்த வழக்கு சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து, கைதுசெய்யப்பட்டனர்.இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் ஆஜராகி, மத்திய அரசின் கடன் திட்டங்கள் தொடர்பாக மாவட்டம்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் அறக்கட்டளை சார்பாக நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும், காவல்துறை மிகைப்படுத்தி காட்டி வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.எந்த மோசடியும் இல்லை,பணம் வாங்கிய புகாரில் பணத்தை திருப்பி கொடுத்ததால் சமரசம் ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, அறக்கட்டளைக்கு மத்திய மாநில அரசுகளுடன் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், அதுபோன்ற பெயரை கொண்ட அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் என கூறி, பிரதமரின் புகைப்படம்,அரசின் சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளதால், அரசின் முக்கிய பிரமுகர் என்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளதாகவும் சுட்டிக்காட்டி, ஜாமீன் வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மத்திய மாநில அரசுகளின் எந்த அங்கீகாரமும் இல்லாத ஒரு அமைப்பு,அரசின் சின்னங்களை பயன்படுத்துவதும், பதவிக்காக பணம் பெறுவதும், விஐபி அல்லது உயர் பதவியில் உள்ளவர் போல தோற்றத்தை உருவாக்குவதும் அவமானகரமானது என குறிப்பிட்டுள்ளார்.மகளின் திருமணத்திற்காக இடைக்கால ஜாமின் பெற்ற முத்துராமன்,பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் சமரசம் செய்துள்ளதை சுட்டிக்காட்டி அதிருப்தி தெரிவித்தார்.பின்னர் இருவரின் ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow