ரயில்களில் குடிகாரர்கள் தொல்லை!-   பாதுகாப்பு கோரும் சமூக ஆர்வலர்கள்

ரயில்வே காவல்துறை பொதுப்பெட்டிக்கு வருகின்றவர்களை மது அருந்திவிட்டு வருகிறார்களா என்று மது சோதனைக்கருவிகள் உதவியோடு சோதித்து நடவடிக்கை  எடுக்க வேண்டும்

Dec 26, 2023 - 12:25
Dec 26, 2023 - 14:52
ரயில்களில் குடிகாரர்கள் தொல்லை!-   பாதுகாப்பு கோரும் சமூக ஆர்வலர்கள்

குடிகாரர்களால் எங்கும் தொல்லை, எதிலும் தொல்லை என்னும் நிலையே நமது நாட்டில்  ஏற்பட்டுள்ளது.குடிகாரர்கள் குடித்த பின்பு தன்னிலையை அறியாமல் பல்வேறு சேஷ்டைகளில் ஈடுபட்டு வருவதை அன்றாடம் பொது இடங்களில் நம்மால் காண முடிகின்றது.அந்த வகையில் ரயில்களிலும்,அவர்களுடைய தொல்லை தொடர்ந்து எல்லைமீறி பெருகி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். 

இது குறித்து மயிலாடுதுறை சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம் நம்மிடம் பேசினார். “சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கும், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற பகுதிகளுக்கும் செல்லுகின்ற ரயில்களில் பொதுப்பெட்டிகளில் பல குடிகாரர்கள் ஏறிக்கொண்டு படுத்துக் கொள்வது, மற்றவர்களுக்கு  இடம் தர மறுப்பது, கொச்சை வார்த்தைகளை பயன்படுத்துவது, யாராவது எதிர்த்து கேட்பவர்களிடம் சண்டை போடுவது என்னும் நிலையே தொடர்ந்து நீடித்து வருகிறது. பொதுப் பெட்டிகளில் வருகின்றவர்கள் பெரும்பாலும் வேலைகளுக்குச் சென்று விட்டு ஊர் திரும்புவர்களாகவும் பெண்கள்,இளைஞர்களும் முதியவர்களும் அதிக அளவில் உள்ளன.

 இந்நிலையில் சென்னையில் ரயில் ஏறுவதற்கு முன்பாக குளிர்பான பாட்டில்களில் மதுவை ஊற்றி அடைத்துக்கொண்டு, ஏதோ குளிர்பானம் குடிப்பது போல பாவனை செய்து குடித்துக் கொண்டே வருவதையும் அடிக்கடி ரயில்களில் காணப்படுகிறது. பொதுப்பெட்டியின் இருக்கைகளில் படுத்துக்கொண்டு நகராமல், வருபவர்களுக்கு இடம் தராமலும் அநாகரீகமாக நடந்து கொள்கின்ற குடிகாரர்களின் மீது ரயில்வே காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ரயில்வே காவல்துறை பொதுப்பெட்டிக்கு வருகின்றவர்களை மது அருந்திவிட்டு வருகிறார்களா என்று மது சோதனைக்கருவிகள் உதவியோடு சோதித்து நடவடிக்கைகள்  எடுக்கின்ற பொழுது மட்டுமே இப்படிப்பட்ட குடிகாரர்களின் வருகை ரயில் நிலையத்தில் குறையும். அப்பொழுதுதான் ரயில் பயணம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். இல்லையேல் குடிகாரர்களுடனான தேவையற்ற பிரச்சனைகள், அவமதிப்புகள், ஏன் சண்டைகள் கூட  ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது. உடனடியாக இவ்விஷயத்தில் ரயில்வே துறையும் காவல்துறையும் நடவடிக்கை எடுத்து ரயில் பயணிகளை பாதுகாத்து பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதி செய்ய  வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow