பாஜக 2.ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. இதிலாவது தமிழ்நாடு வேட்பாளர்கள் உள்ளனரா?!
மக்களவைத் தேர்தல் சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அமைச்சர்கள் நிதின் கட்காரி, அனுராக் தாகூர், அரியானா முன்னாள் முதலமைச்சர் எம்.எல்.கட்டார் உள்ளிட்ட 72 பேருடன் 2.ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாஜக தலைமையிலான NDA கூட்டணியும், மறுபுறம் I.N.D.I.A கூட்டணியும் அனல்பறக்கும் வேகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா - ராஜ்நாத்சிங் உள்ளிட்ட 195 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. இந்நிலையில் 72 பேர் கொண்ட 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் பாஜக வெளியிட்டுள்ளது. அதன்படி டெல்லியில் 2, குஜராத்தில் 7, ஹரியானாவில் 6, இமாசலப்பிரதேசத்தில் 2, கர்நாடகாவில் 20, மத்தியப்பிரதேசத்தில் 5, மகாராஷ்டிராவில் 20, தெலங்கானாவில் 6, உத்தரகாண்ட்டில் 2, திரிபுராவில் ஒன்று உள்ளிட்ட 72 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மகாராஷ்டிராவின் நாக்பூர் தொகுதியில் நிதின் கட்கரியும், கர்நாடகாவின் தார்வத் தொகுதியில் பிரகலாத் ஜோஷியும், இமாச்சலின் ஹமிர்பூரில் அனுராக் சிங் தாகூரும், மும்பை வடக்கில் பியூஷ் கோயலும் என மத்திய அமைச்சர்கள் போட்டியிடுகின்றனர். அரியானாவில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த மனோகர் லால் கட்டார் கர்னால் தொகுதியிலும், கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா ஷிமோகா தொகுதியிலும், பாஜக இளைஞர் அணித்தலைவர் தேஜஸ்வி சூர்யா பெங்களூருவின் தெற்கு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்டின் பாஜக செய்தித்தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அணில் பலுனி கர்வால் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார்.
பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியலைப் போலவே 2ம் பட்டியலிலும் தமிழ்நாடு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாடு, பீகார், ஒடிசாவில் நடந்துவரும் கூட்டணிப் பேச்சுவார்த்தையால் இம்மாநில வேட்பார்கள் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
What's Your Reaction?