புறப்பட்டார் விஜய் : ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்: மலேசியாவில் குவியும் திரையுலகினர், ரசிகர்கள்
ஜனநாயகன் பட ஆடியோ லாஞ்ச் நாளை மலேசியாவில் நடைபெற உள்ள நிலையில், திரையுலகினர், ரசிகர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம், அடுத்த ஆண்டு (2026) பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. அரசியலில் களமிறங்கிய விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், ‘ஜனநாயகன்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு நாளை மலேசியாவில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, விழாவுக்கு மலேசியா அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதில், முழுக்க முழுக்க சினிமா சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும். யாரும் அரசியல் பேச கூடாது. ரசிகர்கள் கட்சி கொடி, டி-சர்ட், துண்டு அணிந்து வரக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை போன்ற நிபந்தனைகளை மலேசிய அரசு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாளை நடைபெறும் இசை வெளியீட்டுக்காக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மலேசியா புறப்பட்ட வண்ணம் உள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மலேசியா புறப்பட்டார் விஜய்
இந்த நிலையில், நாளை பிரமாண்டமாக நடைபெற உள்ள இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க நடிகர் விஜய் சென்னை விமானத்திற்கு வந்து தனி விமானம் மூலம் மலேசியா புறப்பட்டார்.
இந்த விழாவில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் ஏற்கனவே மலேசியா சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லீ ஆகியோரும் இந்த இசை வெளியீட் விழாவில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
குவியும் திரையுலகினர்
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது. இவ்விழாவில் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவா, இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் நெல்சன், பாடகர்கள், எஸ்.பி.பி. சரண், கிரிஷ், ஹரிஷ் ராகவேந்திரா, திப்பு, பாடகிகள் அனுராதா ஸ்ரீராம், சுஜாதா மோகன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்கள் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் வீடியோ தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவர்களை தவிர நடிகர் தனுஷ் உள்ளிட்ட பலரும் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
What's Your Reaction?

