"அம்மாவே போய் சேந்துருச்சு, அப்புறம் என்ன அம்மா உணவகம்...?" – ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு!
அம்மா உணவகம் குறித்த எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டை குறிப்பிட்டு நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி "அம்மாவே போய் சேந்துருச்சு , அப்புறம் என்ன அம்மா உணவகம்...?" என்று விமர்சித்தார்.
சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற சென்னை வடக்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்றார். இந்த நிலையில், மேடையில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, ஆலந்தூர் அம்மா உணவகம் அரசுப் பள்ளியாக மாற்றப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளதை விமர்சிக்கும் வகையில் கருத்துகளை கூறினார்.
அப்போது, ”அம்மாவே(ஜெயலலிதா)) போய் சேந்துருச்சு, அப்புறம் என்ன அம்மா உணவகம்..? என்று தொண்டர்களிடையே பேசிய ஆர்.எஸ்.பாரதி, ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஒன்றரை கோடி ரூபாய்க்கு இட்லி தோசை சாப்பிட்ட எடப்பாடி கும்பல், ஏதோ... 150 பேர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற அம்மா உணவகத்தையெல்லாம் திமுக மூடிவிட்டது என்பது போல் பேசி வருகின்றனர்.
வீணாய்போன உணவை ஜெயலலிதா அரசு அம்மா உணவகத்தில் பரிமாறியது என்று குற்றம்சாட்டியதுடன் அம்மா உணவகத்தில் இரவில் பரிமாறப்படும் சப்பாத்தி, குருமாவை இங்கிருக்கும் பிகார், உத்தர பிரதேசக்காரன் தான் மொத்தமாக சாப்பிடுறான். நம்ம வரிப்பணத்தை செலவு செய்து அவனுக்கு சாப்பாடு போடுகிறோம்” என்று ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்து பேசினார்.
மேலும் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் நடக்கும் ஆட்சி மகாத்மா காந்தியின் ஆட்சி என்று பெருமித்ததுடன் கூறிய ஆர்.எஸ்.பாரதி, ”திமுக தொண்டர்கள் வட்டச் செயலாளர் மீது குறை இருந்தால் பகுதி செயலாளரிடம் கூறுங்கள், பகுதி செயலாளர் மீது குறை இருந்தால் மாவட்ட செயலாளரிடம் கூறுங்கள், மா.செ மீதோ சட்டமன்ற உறுப்பினர்கள் மீதோ குறை இருந்தால் நேரடியாக தலைமைக் கழகத்திற்கு வந்து என்னிடம் புகார் தெரிவியுங்கள், எந்த நேரத்தில் யார் வந்து புகார் சொன்னாலும் கேட்பதற்கு நான் தயாராக உள்ளேன். அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க திமுக தலைமை தயங்காது” என்று நிர்வாகிகளை எச்சரித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “திமுக பவள விழாவை கொண்டாடுகிறது. 75 ஆண்டுகள் என்பது சாதாரண விஷயம் அல்ல. திமுகவுக்கு இது மிகப்பெரிய நிகழ்ச்சி. எனவே தான் 2019 ஆம் ஆண்டிலிருந்து எங்களுடன் பயணிக்கக்கூடிய கூட்டணி கட்சிகளை அழைத்து பவள விழாவை நடத்துகிறோம். எங்கள் கூட்டணியில் எந்த கட்சியும் விலகவில்லை புதிதாக கமல்ஹாசன் வந்துள்ளார். ஓ.பி.எஸ். எப்படியாவது 2 அணியையும் சேர்க்க வேண்டும் என்று நினைத்து வலை வீசி பார்க்கிறார். அதற்காகவே வேலுமணி , வைத்திலிங்கம் மீது திமுக ஆட்சியில் பொய் வழக்கு பதிவு செய்யப்படுவதாக கூறுகிறார்” என்று தெரிவித்தார்.
What's Your Reaction?