ஈரானுக்கு பதிலடி கொடுக்காமல் தூங்க மாட்டோம்... இஸ்ரேல் ஆவேசம்..!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே உருவாகியுள்ள போர் பதற்றத்தை தடுக்க உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலில், இஸ்ரேல் ஈரானுக்கு உரிய  பதிலடி கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது. 

Apr 16, 2024 - 09:24
ஈரானுக்கு பதிலடி கொடுக்காமல் தூங்க மாட்டோம்...  இஸ்ரேல்  ஆவேசம்..!

கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் துணை தூதரக வளாகம் மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் ஈரானின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏப்ரல் 13 ஆம் தேதி இஸ்ரேல் மீது  தாக்குதலை நடத்தியது. அதில் நூறுக்கும் மேற்பட்ட ட்ரோன்கள், பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை வீசி தாக்கியது.

இந்த தாக்குதலின் போது அமெரிக்காவின் உதவியுடன் பெரும்பாலான ட்ரோன், ஏவுகணை தாக்குதல்களை இஸ்ரேல் முறியடித்தது. தற்போது, இச்சம்பவம் குறித்து பேசியுள்ள இஸ்ரேல் ராணுவ தளபதி ஹர்சி ஹல்வி, உலக தலைவர்கள் தாக்குதலை நடத்த வேண்டாம், அது போர் பதற்றத்தை அதிகரிக்கும் என வலியுறுத்தியதை சுட்டிக்காட்டி, நாங்கள் போரை எந்த விதத்திலும் தூண்டாத வகையில் செயல்படுவதாக உறுதியளித்தார். ஆனால், ஈரான் நடத்திய தாக்குதலுக்கு கட்டாயம் பதிலடி கொடுப்போம் எனவும் பேசியிருக்கிறார். 

1979-க்கு பின் ஈரான் முதல்முறையாக அண்டை நாட்டின் மீது தாக்குதலை நடத்தியிருக்கிறது. அதன் எதிரொலியாக பதில் தாக்குதலுக்கு இஸ்ரேலும் தயாராகி வருவதாக தெரிகிறது. இதனால் அச்சத்தில் ஆழ்ந்துள்ள ஈரான் மக்கள் போரை உடனே நிறுத்த ஈரானையும் இஸ்ரேலையும் வலியுறுத்தி போராட்டங்களில் குதித்துள்ளனர். இதில் குறிப்பாக அமெரிக்காவை கடுமையாக சாடும் மக்கள், முதலில் இஸ்ரேலுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். 

ஏற்கனவே உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலில், காசா பகுதியில் மட்டும் 33 ஆயிரத்திற்கு மேலான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஒருபக்கம் உள்நாட்டு போர், மறுபக்கம் லெபனான் எல்லையில் தாக்குதல், தற்போது ஈரானுடன் மோதல் என இஸ்ரேலில் அசாதாரண சூழல் அதிகரித்துள்ளது. ஏற்கனவே நிலையற்ற பொருளாதார சூழலால் மக்கள் தவித்து வரும் நிலையில், தொடர் போர் பதற்றம் மத்திய கிழக்கு மட்டுமின்றி உலகின் மூளை முடுக்கையும் பாதிக்கும் என்பது வல்லுநர்களின் எச்சரிக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow