ஓட்டுக்குப் பணம் கொடுத்த திமுகவினர்..? அதிகாரிகளைப் பார்த்து பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டம்...
விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளர் துரை ரவிக்குமாருக்கு வாக்களிக்க ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர், அதிகாரிகளைப் பார்த்ததும் தெறித்து ஓடிய சம்பவம் உளுந்தூர்பேட்டையில் நடந்துள்ளது.
விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்குட்ட உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள கிராமம் பாண்டூர். விழுப்புரம் தொகுதியில் I.N.D.I.A கூட்டணி சார்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் துரை ரவிக்குமார் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். திமுகவைச் சேர்ந்தவர்கள் துரை ரவிக்குமாருக்கு வாக்களிக்க ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது. தகவல் அறிந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும், காவல்துறையினரும் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர். அப்போது ஓட்டுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த நபர்கள் அதிகாரிகளைப் பார்த்ததும் பின்னங்கால் பிடரியில் அடிக்க தப்பியோடியுள்ளனர்.
இதனிடையே, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கக்கோரி, பாமக வேட்பாளர் முரளி சங்கர் மற்றும் பாஜக கூட்டணி கட்சி தொண்டர்களும் இரவில் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேல் மற்றும் டிஎஸ்பி மகேஷ் ஆகியோர் வேட்பாளர் முரளி சங்கர் மற்றும் தொண்டர்களிடையே உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து போராட்டத்தை முடித்து வைத்தனர்.
இதையடுத்து பணப்பட்டுவாடா குறித்து பாண்டூர் கிராமத்தில் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
What's Your Reaction?