முதலமைச்சர் வருகைக்காக பள்ளி வாகனங்களைப் பிடுங்கிக் கொள்வதா? அண்ணாமலை ஆவேசம்...

Mar 13, 2024 - 11:41
முதலமைச்சர் வருகைக்காக பள்ளி வாகனங்களைப் பிடுங்கிக் கொள்வதா? அண்ணாமலை ஆவேசம்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 13) பொள்ளாச்சி சென்றுள்ள நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளில் இருந்தும், பள்ளி வாகனங்களை, வற்புறுத்திப் பெற்றுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,  திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தால், மாணவர்கள் பள்ளிக்கு வர போதுமான வாகனங்கள் இல்லாமல், பல பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பள்ளியிறுதிப் பொதுத்தேர்வுகள் நடைபெறும் இந்த நேரத்தில், தங்கள் விளம்பர அரசியலுக்காக, மாணவர்கள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களைப் பிடுங்கிக் கொள்ளும் உரிமையை, திமுக அரசுக்கு யார் கொடுத்தது? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். 

மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள், திமுகவின் இது போன்ற அதிகார துஷ்பிரயோகத்துக்குத் துணை செல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் கூறியுள்ளார். ஒருபுறம், போதைப்பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்தத் தவறி, தமிழக இளைஞர்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டிருக்கும் வேளையில், பள்ளி மாணவர்களுக்கான, பொதுத் தேர்வுகள் நடைபெறும் நேரத்தில், தங்கள் அரசியலுக்காக பள்ளி வாகனங்களை முறைகேடாக கட்டாயப்படுத்தி வாங்குவது, அராஜகத்தின் உச்சம் என்பதை விளம்பர விரும்பி முதலமைச்சர் ஸ்டாலின்  உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை காட்டமாக தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow