லட்டு பாவங்கள் - பரிதாபங்கள் சேனல் மீது பாஜக புகார் 

திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக எழுந்த சர்ச்சையை ஒட்டி பரிதாபங்கள் யூ ட்யூப் சேனல் வீடியோ வெளியிட்டதற்கு தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Sep 26, 2024 - 19:02
Sep 26, 2024 - 19:07
லட்டு பாவங்கள் - பரிதாபங்கள் சேனல் மீது பாஜக புகார் 
laddu pavangal

திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் பிரசித்தி பெற்ற பிரசாதம் லட்டு. திருப்பதி லட்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படு நெய்யில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி மீது குற்றச்சாட்டை முன்வைத்தார். இக்குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த லட்டு விவகாரம் இந்திய அளவில் பெரும் பேசு பொருளான நிலையில், தமிழின் பிரபல யூடியூபர்களான் கோபி - சுதாகர் ஆகியோர் தங்களது ‘பரிதாபங்கள்’ சேனலில் 'லட்டு பரிதாபங்கள்' என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோ வெளியான கொஞ்ச நேரத்திலேயே பரவலான கவனம் பெற்றது. இந்து மத நம்பிக்கையை புண்படுத்தும்படி இருப்பதாக எதிர்ப்புகள் வந்தாலும் பலரும் இந்த வீடியோவை பகிரவும் செய்தனர். 

விடியோ வெளியான சிறிது நேரத்திலேயே அந்த வீடியோ சேனலில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. இது தொடர்பாக பரிதாபங்கள் சேனல் குழுவினர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “பரிதாபங்கள் சேனலில் கடைசியாக வெளியிடப்பட்ட வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டதே அன்றி யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை. அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்து, சம்பந்தப்பட்ட வீடியோவை நீக்கியிருக்கிறோம். இதுபோன்று இனி வரும் காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று வருத்தம் தெரிவித்துப் பதிவிட்டிருந்தனர்.

இப்படியான சூழலில் இந்துக்களின் உணர்வைக் காயப்படுத்தும் விதமாக வீடியோ வெளியிட்ட பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது நடவடிக்கை வேண்டும் எனக்கோரி ஆந்திர டிஜிபிக்கு பாஜக விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்த மனுவில் “பரிதாபங்கள் சேனல் வீடியோவை நீக்கினாலும் இந்துக்களின் உணர்வுகளை அந்த வீடியோ அவமதித்துவிட்டது. அத்தோடு மத வெறுப்பைப் பரப்பும் வகையிலும், சட்டம் ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தும் வகையிலும் அந்த வீடியோ இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ள அப்புகார் மனுவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அமர்பிரசாத் ரெட்டி பதிவிட்டுள்ளார். அப்பதிவில் பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜாவின் அனுமதியுடனே ஆந்திர டிஜிபிக்கு பாஜக சார்பாக புகார் அளித்துள்ளதாகவும் கூறியிருக்கிறார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow