UN : காசாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரியுங்கள்... ஐநாவில் இந்தியா குரல்... 

அனைத்து பணயக்கைதிகளையும் நிபந்தனையின்றி உடனே விடுவிக்க வேண்டும் எனவும் ருசிரா காம்போஜ் வலியுறுத்தல்

Mar 5, 2024 - 10:41
UN : காசாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரியுங்கள்... ஐநாவில் இந்தியா குரல்... 

காசாவில் உடனடியாக மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க வேண்டும் என ஐ.நாவில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதனால் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. அடுத்தடுத்து நிகழ்ந்த தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் பலரை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். 

இதற்கிடையில் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கு பல்வேறு நாடுகள் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், காசாவில் மேற்கொள்ளப்படும் தாக்குதல் மற்றும் மக்கள் பாதிப்புகள் பற்றி  ஐநாவின் பொது ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ் உரையாற்றினார். அதில், காசாவில் கடந்த 5 மாதங்களாக நடந்துவரும் மோதலால் இந்தியா கவலையடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். அப்பகுதியில் மக்களுக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் உயிரிழந்துள்ளது வருத்தமளிக்கிறது எனவும் கூறினார். 

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான மோதலில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளது ஏற்றுக்கொள்ளவே முடியாது எனக் கூறி அவர் கண்டனம் தெரிவித்தார். இந்தியா எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைபாட்டை சமரசம் இன்றி வெளிப்படுத்தி வருவதாக தெரிவித்த ருசிரா காம்போஜ், அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும்,  காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை உடனடியாக அதிகரிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார்.

இஸ்ரேலின் பாதுகாப்பு தேவைகளை கருத்தில் கொண்டு பாலஸ்தீன மக்கள் பாதுகாப்பான எல்லைக்குள் சுதந்திரமாக வாழ இரு நாட்டுத் தீர்வை ஆதரிப்பதில் இந்தியா உறுதி பூண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow