லட்சம் ரூபாய் போட்டும் தேறல.. நிலத்தில் அழுகும் தர்பூசணி.. வேதனையில் விவசாயிகள்
தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரிப்பால் கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வராத சூழ்நிலை நிலவுகிறது. இதனால், தோட்டத்திலேயே தர்பூசணி பழங்கள் அழுகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கே.ராசியமங்கலத்தில் பரிசுத்தம் என்ற விவசாயி அவருக்கு சொந்தமான சுமார் 4 ஏக்கர் நிலத்தில் கோடை காலத்தில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய தர்பூசணி பழத்தை விளைவித்துள்ளார். நான்கு ஏக்கருக்கு இரண்டரை லட்சம் முதல் மூன்று லட்சம் வரை வட்டிக்கு வாங்கி செலவு செய்து தர்பூசணி பழத்தை விளைவித்துள்ளார். தர்பூசணி பழங்களை 55 லிருந்து 70 நாட்களுக்குள் தோட்டத்திலிருந்து வெட்டி அறுவடை செய்ய வேண்டும்.
தற்போது பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயி பரிசுத்தம் தோட்டத்தில் விளைவித்த தர்பூசணிகளை 80 நாட்கள் ஆகியும் வியாபாரிகள் யாரும் கொள்முதல் செய்ய முன் வராததால் அந்த தர்பூசணி பழங்கள் தோட்டத்திலேயே அழுகி வருவதால் செய்வதறியாமல் விவசாயி பரிசுத்தம் தவித்து வருகிறார்.
விவசாயி பரிசுத்தம் தவிர்த்து, அந்த பகுதியில் தர்பூசணி பழங்களை விளைவித்த விவசாயிகளிடமிருந்தும் தர்பூசணி பழங்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன் வராததால் என்ன செய்வது? என்று தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். தற்போது தோட்டத்திலேயே அழுகி வரும் தர்பூசணி பழங்களை வேளாண் துறையினர் கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையினை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விவசாயிகள் தரப்பில் எழுந்துள்ளது.
What's Your Reaction?






