50 years of Microsoft: மைக்ரோசாப்ட்டுக்கு வயது 50.. இன்ப அதிர்ச்சி அளித்த பில்கேட்ஸ்!
மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது (ஏப்ரல் 4), அதனையொட்டி 50 ஆண்டுகளுக்கு முன்பு தான் எழுதிய மென்பொருள் நிரல் குறியீட்டை பொது மக்கள் பார்வைக்கு பகிர்ந்துள்ளார் பில்கேட்ஸ்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏப்ரல் 4, 1975 அன்று பில் கேட்ஸ் மற்றும் பால் ஆல்லன் ஆகியோரால் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. இன்றைய தினம் (ஏப்ரல் 4), மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகப்போகிறது. கணினி உலகில் மைக்ரோசாப்ட் அளவிற்கு புரட்சியை ஏற்படுத்திய நிறுவனங்கள் வெகு சில மட்டும் தான்.
ஆரம்பத்தில், மைக்ரோசாஃப்ட் தனிப்பட்ட கணினிகளுக்கான (personal computers) மென்பொருட்களை உருவாக்கியது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முதல் பெரிய வெற்றி Altair 8800 மைக்ரோ கணினிக்கான பேசிக் (BASIC) மொழிபெயர்ப்பான் மென்பொருள் (interpreter) உருவாக்கியது தான். Microsoft Windows, Microsoft Office, Azure, மற்றும் AI தொழில்நுட்பங்களை கொண்ட Copilot என காலத்திற்கேற்ப தன்னை தானே தகவமைத்துக் கொண்டு இன்றளவும் உலகளவில் கணினித்துறையில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது.
இந்நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ், நிறுவனத்தின் 50 ஆண்டுகள் நிறைவையொட்டி இன்ப அதிர்ச்சி ஒன்றினை அளித்துள்ளார்.
50 ஆண்டு நினைவுகளை பகிர்ந்த பில்கேட்ஸ்:
தனது கேட்ஸ் நோட்ஸ் (Gates notes) வலைத்தளத்தில், நிறுவனம் தொடங்கிய போது சந்தித்த சவால்கள், அதனை கையாண்ட விதம் குறித்த தனது நினைவலைகளை பகிர்ந்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் ஏராளமான குறியீடுகளை (coding) எழுதியுள்ள பில்கேட்ஸ், "நான் எழுதியதிலேயே மிகவும் அருமையான குறியீடு" என்று 50 ஆண்டுகளுக்கு முன்பு தான் எழுதிய மென்பொருள் நிரல் குறியீட்டை பொதுமக்கள் பார்வைக்கு பகிர்ந்துள்ளார். குறியீடு எழுதிய காகிதத்தை கையில் பிடித்தவாறு ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அந்த கோடிங் எழுதிய காகிதமானது பார்ப்பதற்கு ஒரு சிறுமலை உயரத்திற்கு உள்ளது.
தனது வலைத்தள பதிவில், “ஜனவரி 1975-இல் வெளியான பாப்புலர் எலக்ட்ரானிக்ஸ் பத்திரிகையின் பிரதியால் தான் ஈர்க்கப்பட்டேன். அதில் MITS என்ற சிறிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு புரட்சிகர தனிப்பட்ட கணினியான ஆல்டேர் 8800 இன் அட்டைப்படம் இடம்பெற்றிருந்தது. 19 வயதான நானும், எனது ஹார்வர்ட் பல்கலைக்கழக நண்பர் பால் ஆலன் இருவரும் ஆல்டேரின் தயாரிப்பாளர்களை அணுகி, ஆல்டேர் 8800 இயங்கும் சிப்பிற்கான BASIC நிரலாக்க மொழியின் (programming language) ஒரு பதிப்பை நாங்கள் உருவாக்கித் தருவதாக கூறினோம்.”
”இதனை உருவாக்க நாங்கள் இரண்டு மாதங்கள் இரவும் பகலும் உழைத்தோம். பின்னர் அந்த குறியீட்டை MITS இன் தலைவரிடம் வழங்கினோம். அவர் மென்பொருளுக்கு உரிமம் வழங்க ஒப்புக்கொண்டார். Altair BASIC எங்கள் புதிய நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக மாறியது, அதை நாங்கள் மைக்ரோ-சாஃப்ட் என்று அழைக்க முடிவு செய்தோம்," என்று பில்கேட்ஸ் தனது வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2000-ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்டின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து பில்கேட்ஸ் விலகினார் என்பது அனைவரும் அறிந்ததே. அவரின் விலகலுக்குப் பிறகு மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப நிறுவனம் சிறிது காலம் ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. தற்போது சத்யா நாதெல்லாவின் வழிகாட்டுதலில் மீண்டும் கணினித்துறையில் கோலோச்சி வருகிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் $2.84 டிரில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more: திடீர் வைராலகும் Studio Ghibli: ஆதரவோடு விமர்சனங்கள் எழுவது ஏன்?
What's Your Reaction?






