ரூ.1 கோடி இழப்பீடு கோரிய ஆதவ்! ஸ்டாலினுக்கு பறந்த நோட்டீஸ்! பின்னணி என்ன?

தன்னைப் பற்றி திமுக ஐடி விங் அவதூறு பரப்பியதாக ரூ.1 கோடி இழப்பீடு கோரி ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கில், மு.க.ஸ்டாலினுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன் பின்புலம் என்ன?...

Aug 28, 2026 - 14:19
ரூ.1 கோடி இழப்பீடு கோரிய ஆதவ்! ஸ்டாலினுக்கு பறந்த நோட்டீஸ்! பின்னணி என்ன?
High Court Notice to MK Stalin in Aadhav Arjuna Case

தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாக ரூ.1 கோடி இழப்பீடு கோரி ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கில், மு.க.ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திமுக ஐடி விங் சமூக வலைதளத்தில் தன்னைப் பற்றி அவதூறான தகவல் வெளியிட்டதாகக் கூறி, ரூ.1 கோடி இழப்பீடு கோரி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சையை ஏற்படுத்திய சமூக வலைதளப் பதிவு:

சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்துள்ள மனுவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வையில் திமுக ஐடி விங் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 8-ம் தேதி திமுக ஐடி விங் சார்பில் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், அமலாக்கத்துறையால் சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஜான் பிரிட்டோ என்பவர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பதிவு தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தினர் குறித்தும் தவறான தகவலை பரப்பும் வகையில் அமைந்துள்ளதாக ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார்.

வைரலான பதிவு:

இந்த சமூக வலைதளப் பதிவு வெளியான இரண்டு நாட்களிலேயே சுமார் 2 லட்சத்து 67 ஆயிரம் பேர் பார்த்ததாகவும், 2,600-க்கும் மேற்பட்டோர் மறுபதிவு செய்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுமார் 4,400 பேர் அந்தப் பதிவுக்கு விருப்பம் தெரிவித்ததுடன், 150 பேர் கருத்துகளையும் பதிவு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.

திமுகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளக் கணக்கு என்பதால், அந்தப் பதிவுக்கு திமுகவும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் பொறுப்பேற்க வேண்டும் என ஆதவ் அர்ஜுனா தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

"ஜான் பிரிட்டோ எனக்கு உறவினர் இல்லை":

இந்த விவகாரம் தொடர்பாக தனது மனுவில் ஆதவ் அர்ஜுனா, "ஜான் பிரிட்டோ என்பவர் எனக்கு உறவினர் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பி.ஜான் பிரிட்டோ என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து, அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ள ஜான் பிட்டோவும் தானும் ஒரே நபர் இல்லை எனத் தெரிவித்துள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனால், தன்னைப் பற்றி தவறான தகவலை சமூக வலைதளத்தில் பரப்பியதாகக் கூறி, சம்பந்தப்பட்ட பதிவை நீக்குவதுடன், அதற்காக ரூ.1 கோடி இழப்பீடு வழங்க திமுக ஐடி விங் மற்றும் மு.க.ஸ்டாலினுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஆதவ் அர்ஜுனா கோரிக்கை விடுத்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை:

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் ஆதவ் அர்ஜுனா தரப்பில் வழக்கறிஞர் ஏ.பி.சூரிய பிரகாசம் ஆஜராகி, வழக்கு தொடர்பான வாதங்களை முன்வைத்தார்.

செப்.15க்குள் பதிலளிக்க உத்தரவு:

மனுதாரர் தரப்பு வாதங்களைத் தொடர்ந்து, இந்த வழக்கில் பதிலளிக்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தகவல் தொடர்புக் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த நோட்டீஸுக்கு வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, சமூக வலைதளப் பதிவு தொடர்பான ஆதவ் அர்ஜுனாவின் ரூ.1 கோடி இழப்பீடு கோரிக்கை மற்றும் பதிவை நீக்கக் கோரும் மனு மீதான அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 15-ம் தேதிக்கு பின்னர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow