திடீரென வழிமறித்த போலீஸ்- பிரேக் போட்டத்தால் கார் மோதி விபத்து

சாலைகளில் தடுப்புகள் இல்லாமல் சோதனை நடத்துவதை போக்குவரத்து போலீசார் நிறுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

Nov 5, 2024 - 13:04
திடீரென வழிமறித்த போலீஸ்- பிரேக் போட்டத்தால் கார் மோதி விபத்து

போக்குவரத்து போலீசார் சாலையில் செல்லும் காரை திடீரென வழிமறித்ததால் பின்னால் வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீசார் பகல் மற்றும் இரவு நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றச்செயல்களை குறைக்கும் பொருட்டும், வாகன விபத்துக்களை தடுக்கும் நோக்கிலும் வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் சில நேரங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுகிறது.

இந்த நிலையில், சென்னையில் திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ராயப்பேட்டை, அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பீக்ஹவர்ஸ் நேரங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை புறநகர் பகுதியில் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து போலீசார் திடீர் திடீரென வாகனங்களை மறிப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

குறிப்பாக மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கும் சாலை போன்ற இடங்களில் திடீரென முன்னாள் செல்லும் வாகனங்களை தடுப்பதால் விபத்துக்கள் தொடர்வதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பெருங்களத்தூர் மேம்பாலத்தில் வண்டலூர் நோக்கி சென்ற காரை போக்குவரத்து போலீசார் திடீரென மறித்தனர்.

இதில் கார் ஓட்டுநர் பிரேக் அடிக்க பின்னால் வந்த கார் வந்த காரின் பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த காட்சிகள் அனைத்தையும் வாகனத்தில் சென்ற ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதுபோன்று சாலைகளில் தடுப்புகள் இல்லாமல் சோதனை நடத்துவதை போக்குவரத்து போலீசார் நிறுத்த வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow