ஆசை வார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றிய பிரபல பாடகர்.. தடாலடியாகப் பாய்ந்த வழக்கு!
இளம்பெண்னை திருமண மோசடி செய்ததாக "ஹேப்பி ஸ்ட்ரீட்" பாடகர் குரு குகன் மீது சென்னை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் குரு குகன். 26 வயதான இவர் தனியார் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் பாடகராக பங்கேற்று பிரபலமானவர். சென்னையில் வாரந்தோறும் நடக்கும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியிலும் பல இசையமைப்பாளர்களின், நேரலை இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில், பாடகர் குரு குகன் மீது பரங்கிமலை பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். ஓய்வு பெற்ற எஸ்பிஐ வங்கி மேலாளரின் மகளான அந்த பெண் அளித்த புகாரில் குரு குகன் தனக்கு இசை நிகழ்ச்சி ஒன்றில் கடந்த மே மாதம் அறிமுகமானதாகவும், சில நாட்களிலேயே தன்னை திருமணம் செய்து கொள்வதாக அவர் தன்னிடம் கேட்டதால், தனது பெற்றோரிடம் வந்து பேசுமாறு தான் கூறியதாகவும், அதன்படி தனது பெற்றோரை வந்து சந்தித்த குரு குகன், உங்களது மகள் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்ற பாகுபாடெல்லாம் தான் பார்க்க மாட்டேன் எனவும், அவரை திருமணம் செய்து வைக்குமாறு தனது பெற்றோரிடம் பேசியதாக இளம் பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து காதலர்களாக பழகி வந்த நிலையில், உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் தனியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தன்னை சந்திக்க வந்த குரு குகன் வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தன்னை கட்டாயப் படுத்தி பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும், சீக்கிரமாகவே இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி தன்னை சமாதானப்படுத்தியதாகவும் அந்தப் பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பெற்றோரை சம்மதிக்க வைக்க தாமதமாகிறது என்ற காரணங்களை கூறி வந்த பாடகர் குரு குகன், தான் கருவுற்று இருந்ததை கூறியதால் தன்னை வெளியில் அழைத்துச் செல்வதாக கூறி கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்ததாகத் தெரிவித்துள்ளார். அதற்கான மருத்துவ ஆதாரங்களையும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய புனித தோமையர்மலை மகளிர் காவல் நிலைய போலீசார், பாடகர் குரு குகன் மீது பொய்யான உத்தரவாதம் கொடுத்து பாலியல் உறவு வைத்துக் கொள்வது, மிரட்டி அவமதித்து ஆதாரங்களை அழிப்பது மற்றும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்தவுடன் விசாரணைக்கு அழைத்ததாகவும் ஆனால் பாடகர் குரு குகன் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். தன்னைத் திருமண மோசடி செய்தது போல் பல பெண்களை பாடகர் குரு குகன் ஏமாற்றி இருப்பதாக பதிக்கப்பட்ட பெண்கள் தன்னை தொடர்பு கொண்டு தெரிவித்ததாகவும், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள குரு குகன் முயன்று வருவதாகவும் இசை நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் மலேசியா செல்ல உள்ள குரு குகனை கைது செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
What's Your Reaction?