அதிமுக TO தவெகவுக்கு 15 பேர் ரெடி?...செங்க்ஸ் பேச்சுக்கு ஆளுநரிடம் ஆப்பு வைத்த அதிமுக!

அதிமுகவிலிருந்து 15 எம்.எல்.ஏ-க்கள் தவெகவுக்கு வருவார்கள் என்ற செங்கோட்டையனின் பேச்சு குதிரை பேரத்தை ஊக்குவிப்பதாகக் குற்றம்சாட்டிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அவர் மீதும் தமிழ்நாடு அரசு மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார்.

Oct 15, 2026 - 18:30
அதிமுக TO தவெகவுக்கு 15 பேர் ரெடி?...செங்க்ஸ் பேச்சுக்கு ஆளுநரிடம் ஆப்பு வைத்த அதிமுக!

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை, அதிமுக சட்டமன்றக் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர் இன்று சந்தித்தனர். அப்போது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு ஒன்றை அளித்தனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாட்டில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத் தவெக அரசு விதிகளுக்கு முரணாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார்.

‘குதிரை பேரத்துக்கு இதுவே சாட்சி!’

இதுகுறித்து அவர் கூறுகையில், “அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேரிடம் பல கோடி ரூபாய் கொடுத்து, அவர்களை விலைக்கு வாங்கி, ராஜினாமா செய்ய வைத்ததன் மூலம் தமிழ்நாட்டில் இடைத்தேர்தலைக் கொண்டு வந்தது தவெக அரசு. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும், நிலைநிறுத்திக் கொள்ளவும் இந்த அரசு விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டு வருகிறது.

இந்த அரசின் மூத்த அமைச்சராக இருக்கும் ஒருவர், அதிமுகவில் இருந்து விரைவில் 15 எம்.எல்.ஏ-க்கள் தவெகவுக்கு வருவார்கள் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடைபெறுகிறது என்பதற்கு அந்த அமைச்சரின் பேச்சே சான்றாக இருக்கிறது. அவரது பேட்டி மற்றும் அறிக்கையை ஆளுநரிடம் வழங்கியுள்ளோம்.

குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டப்படும் அரசு மீதும், அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படும் அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்” என்றார்.

6 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா விவகாரம்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிட்டார். ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே ஆளுநரிடமும், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடமும் மனு அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஆனால், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், மீண்டும் ஆளுநரைச் சந்தித்து மனு அளித்துள்ளதாகவும், ஏற்கெனவே கொடுத்த மனுக்கள் மீதும் தற்போதைய புகார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறினார்.

“உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார். எந்தெந்த இடங்களில் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதோ, அங்கெல்லாம் அதிமுக சார்பில் மனு அளித்து வருகிறோம். நடவடிக்கை எடுக்கப்படும் வரை தொடர்ந்து போராடுவோம்” என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

மேலும், அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீது இரண்டு மாதங்களுக்குள் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிமுகவில் எந்தப் பிரச்சினையும் இல்லை!

அதிமுகவில் மூத்த தலைவர்களான சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் தனியாக ஆலோசனை நடத்துவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கட்டுக்கோப்பாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

“ஒரு சிலர் தங்களது கருத்துகளைப் பொதுவெளியில் தெரிவிக்கிறார்கள். அவர்கள் தங்களது கருத்துகளை எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துத் தெரிவித்தால், அவர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் எண்ணத்துடன்தான் அவர் இருக்கிறார். அதிமுக பொதுக்குழுவை உரிய நேரத்தில் கூட்டுவார்” என்றார்.

மேலும், கட்சியைக் காப்பதற்காக எந்தத் தியாகத்தையும் செய்ய எடப்பாடி பழனிசாமி தயாராக இருப்பதாகவும், மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியைத் தமிழ்நாட்டில் கொண்டுவர அவர் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

இடைத்தேர்தல் வெற்றி குறித்து விமர்சனம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் தவெக பெற்ற வெற்றி குறித்துப் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது வழக்கமான ஒன்றுதான் என்றார்.

2019-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைச் சுட்டிக்காட்டிய அவர், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தவெக சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.

“முதலமைச்சர் விஜய் பெற்றிருப்பது பெரிய வெற்றி அல்ல; இது தற்காலிகமான வெற்றிதான். பணநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி. டிஃபன் பாக்ஸ் மூலமாகப் பணம் விநியோகிக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளிலும் அதிமுக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. எனவே, இதை அதிமுகவின் மோசமான தோல்வியாகக் கருத முடியாது. அதிமுகவின் வாக்கு வங்கி வலுவாகவே உள்ளது” என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சை முன்வைத்து அதிமுக ஆளுநரிடம் புகார் அளித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow