ஜெம் வீரமணி வழக்கு: விசாரணை வளையத்தில் சிக்கிய அருண்...பறிப்போகும் ஐபிஎஸ் பதவி?
ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ்ஸிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு தீவிர விசாரணை நடத்திய நிலையில், அவர் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தொழிலதிபரும், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனருமான வீரமணி மீதான போக்சோ வழக்கு தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் விரைவில் பணியிடை நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குழந்தைகள் நல ஆர்வலர் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெம் வீரமணியை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஜெம் வீரமணி மீது இதுவரை 7 போக்சோ வழக்குகள் பதிவு செய்துள்ளன.
மேலும் வீரமணி, அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், வீரமணியின் முன்னாள் உதவியாளர் கணேசன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வருகிற அக்.,-21 ஆம் தேதி வரையும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெம் வீரமணியை சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை அக்.,-26 ஆம் மீண்டும் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் தனது பெயர் இடம்பெறாமல் இருக்க அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு வீரமணி ரூ.50 கோடி முதல் ரூ.70 கோடி வரை கொடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ ஆதாரங்களுடன் அப்போதைய சென்னை மாநகர காவல் கூடுதல் ஆணையர் கண்ணனிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து, வழக்கின் விசாரணை தொடர்பாகக் கோயம்பேடு உதவி ஆணையர் யாஸ்மின், முன்னாள் சென்னை காவல் ஆணையரும் போலீஸ் அகாடமி இயக்குநராகப் பணியாற்றியவருமான அருண், கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
தற்போது, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்து வரும் வாக்குமூலங்களின் அடிப்படையிலும், கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையிலும் இந்த வழக்கை டிஜிபி மகேஸ் குமார் அகர்வால் உத்தரவின்பேரில் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரித்து வருகிறது.
அருணிடம் சரமாரிக் கேள்விகள்!
இந்த நிலையில், முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருணிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வீரமணி வழக்கில் புகார் அளிக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள சூழலில், அருணிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
விசாரணையின்போது அருணிடம் சுமார் 30 கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த வழக்கின் பல்வேறு அம்சங்கள் குறித்து 80-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
சஸ்பெண்ட் செய்யக் கோரிக்கை?
ஜெம் வீரமணி வழக்கில் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் விசாரணை வளையத்தை விரிவுபடுத்தியுள்ளன. இந்தச் சூழலில், அருண் தொடர்ந்து பணியில் இருப்பது விசாரணைக்கு இடையூறாக இருக்கக்கூடும் என்பதால், அவரைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று விசாரணை அதிகாரிகள் தரப்பில் அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில், அருண் ஐபிஎஸ் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் தமிழ்நாடு அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை முடிவுகள் இந்த வழக்கில் அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?

