அன்புமணி மகள்கள் குறித்து அவதூறு..அதிமுக நிர்வாகி கைது.. காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுக, விசிகவினர்..
வன்னியர் சமுதாயம் குறித்து முகநூலில் அவதூறு கருத்து தெரிவித்ததாக அதிமுக நிர்வாகியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள பொம்மியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். அதிமுக உறுப்பினரான இவர், தனது முகநூல் பக்கத்தில் அக்கட்சிக்கு ஆதரவாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்துள்ளார்.
இந்தநிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பாமகவினர் முகநூலில் அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அருண்குமார், வன்னியர் சமுதாயம் குறித்தும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா மற்றும் அவரது மகள்கள் குறித்து முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்டதாக தெரிகிறது.
இதனால், அருண்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாமக சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், அருண்குமாரை தீவட்டிபட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அருண்குமாரின் கைதைக் கண்டித்தும், அவரை விடுவிக்க கோரியும் அதிமுக மற்றும் விசிகவினர் தீவட்டிபட்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து பாமகவினருடன் அதிமுக மற்றும் விசிகவினர் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் காவல்நிலையத்தில் குவிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
What's Your Reaction?