சென்னையில் கட்டிட பணியின் போது தூண் இடிந்து விழுந்து மேற்கு வங்க தொழிலாளி பலி-கட்டிட உரிமையாளர் ஜாமீனில் விடுவிப்பு
சென்னை அமைந்தகரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் தூண் இடிந்து விழுந்து மேற்கு வங்க தொழிலாளி உயிரிழந்த நிலையில், உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அமைந்தகரையில் உள்ள செல்வக்குமார் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில் சொந்தமாக அப்பகுதியில் ஒரு கட்டிடம் கட்டி வருகிறார். இதற்கான கட்டுமான பணியில் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று(மே-16) காலை இரண்டாவது தளத்தில் 2 கட்டிட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் தூண் இடிந்ததில் 2 தொழிலாளிகள் மீது விழுந்து சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்து விட்டார். மற்றொருவர் காயத்துடன் மீட்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் தகவல் அறிந்து வந்த அமைந்தகரை போலீசார் இறந்து போன கட்டிட தொழிலாளி உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் இறந்து போனவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த நவ்சத் சேக் என்பது தெரிய வந்தது. அதே போல காயமடைந்தவரும் அதே மாநிலத்தைச் சேர்ந்த குஸ்முதீன் என கூறப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைப்பெற்று வரும் கட்டிட பணியில் ,சாரம் கட்டுவதற்காக நவ்சத் சேக் துளையிட்ட போது தூண் சரிந்து விழுந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பின்னர் இந்த விபத்து சம்பந்தமாக அமைந்தகரை போலீசார் கட்டுமான நிறுவன உரிமையாளர் செல்வக்குமார் மீது காயம் ஏற்படுத்துதல், அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை விளைவித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் கட்டட உரிமையாளர் செல்வக்குமார் மற்றும் மேலாளர் மதன்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து காவல்நிலையத்துக்கு அழைத்து சென்ற நிலையில், பின்னர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் உடல் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், பிழைப்பு தேடி தமிழகம் வரும் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
What's Your Reaction?