செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல்.. சட்டவிரோத மது விற்பனையை அம்பலப்படுத்தியதால் ஆத்திரம்.. கடலூரில் பரபரப்பு..

Apr 28, 2024 - 10:55
செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல்.. சட்டவிரோத மது விற்பனையை அம்பலப்படுத்தியதால் ஆத்திரம்.. கடலூரில் பரபரப்பு..

கடலூர் மாவட்டம் கழுதூர் கிராமத்தில், மகாவீர் ஜெயந்தி தினத்தன்று சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததை வீடியோ எடுத்த செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தில் மகாவீர் ஜெயந்தி தினமான ஏப்ரல் 21-ம் தேதி அன்று சிலர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டனர். இதனை அறிந்த தனியார் நாளிதழ் செய்தியாளர் வேலன், சம்பவ இடத்திற்கு சென்று மது விற்பனையை வீடியோவாக பதிவு செய்தார். அப்போது அவருடன் மது விற்பனை கும்பல் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்து  சென்ற செய்தியாளர் வேலன், காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். 

இந்த நிலையில், வேலன் தனது நண்பர்களுடன் கழுதூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இதனை தெரிந்து கொண்ட மது விற்பனை கும்பல், இருசக்கர வாகனத்தை வழிமறித்து அவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதில், படுகாயமடைந்த  வேலன், வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்காததே இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே சட்டவிரோத மதுவிற்பனையை தடுத்து செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும், சமீப காலமாக செய்தியாளர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை துறையில் வேலை பார்ப்பவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது…

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow