VIP வரிசையில் சாமி தரிசனம்...ஸ்டிரிக்ட் ஆக ஆர்டர் போட்டு மாட்டிக்கொண்ட போலி நீதிபதி..

Apr 28, 2024 - 10:01
VIP வரிசையில் சாமி தரிசனம்...ஸ்டிரிக்ட் ஆக ஆர்டர் போட்டு மாட்டிக்கொண்ட போலி நீதிபதி..

பழனி முருகன் கோயிலில் மாவட்ட நீதிபதி என கூறிக்கொண்டு சாமி தரிசனம் செய்ய வந்த போலி நீதிபதியை காவல்துறையினர் கைது செய்தனர்.

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் மேற்கொள்கின்றனர். இதில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட விஐபிக்கள் வரிசையில் நிற்காமல் தரிசனம் செய்ய முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

இதனைப் பயன்படுத்தி தருமபுரியை சேர்ந்த ரமேஷ் பாபு (53) என்பவர், திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, தான் மாவட்ட நீதிபதி எனக் கூறியதோடு, பழனி மலைக் கோயிலுக்கு சாமி தரிசனம் மேற்கொள்ள வருவதாகவும், இதற்கு ஏற்பாடு செய்யுமாறும் கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர், நடைமுறைப்படி பழநி நீதிமன்ற ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சொன்னபடி தரிசனத்திற்கு வந்த ரமேஷ் பாபுவிடம், நீதிமன்ற ஊழியர்கள், தரிசனத்திற்கு முன்அனுமதி பெறுவதற்காக அடையாள அட்டையை கேட்டுள்ளனர்.

அதற்கு ரமேஷ்பாபு முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த நீதிமன்ற ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து  ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் அடிவாரம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அவர் போலி நீதிபதி எனவும், சுற்றுலா வழிகாட்டியாக அவர் செயல்பட்டு வருவதும் தெரியவந்தது.

அது மட்டும் இல்லாமல் ஒரே நாளில் அவர், தேனி தேவதானப்பட்டி மூங்கிலனை காமாட்சி அம்மன் கோயிலுக்கும், திண்டுக்கல் ராமலிங்கப்பட்டியில் உள்ள பாதாள செம்பு முருகன் கோயிலுக்கும் நீதிபதி என கூறிக்கொண்டு சகல மரியாதைகளுடன் சென்று தரிசனம் செய்து திரும்பியதும் தெரியவந்தது.

இதுபோன்று தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களுக்கும், பலமுறை நீதிபதி எனக் கூறிச் சென்று தரிசனம் செய்துள்ள ரமேஷ்பாபுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow