Chennai : 11ம் வகுப்பு பொதுத்தேர்வு, பிரதமர் வருகை பரபரப்புகளுக்கு மத்தியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்...
ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம், தமிழ்நாட்டில் 13 தனியார் பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை மற்றும் கோவை நகரங்களில் தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்த நிலையில், வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டுக்கு ஒருநாள் பயணமாக இன்று (மார்ச் 4) பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நடப்பாண்டில் மட்டும் 4வது முறையாக பிரதமர் தமிழ்நாடு வருகிறார். இந்நிலையில் அவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து பாதைகளிலும் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மீண்டும் சென்னையிலும் கோவையிலும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கும் கோவை வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெங்களூருவில் உணவகத்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் நாடு முழுவதையும் பரபரப்பாக்கியுள்ள நிலையில், மீண்டும் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதால் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தின் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். இச்சம்பவத்தால் பள்ளி வட்டாரங்களில் பரபரப்பு காணப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம், தமிழ்நாட்டில் 13 தனியார் பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?