2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம்.. மெட்ராஸ் பட பாணியில் சுவர் அரசியல்

சென்னை: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம் 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறது. சென்னையில் முக்கிய இடங்களில் உள்ள சுவர்களில் முன்பதிவு செய்யும் வேலையை இப்போதே தொடங்கி விட்டனர்.

May 3, 2024 - 17:33
2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம்.. மெட்ராஸ் பட பாணியில் சுவர் அரசியல்


சினிமாவில் பிஸியாக ஹிட் கொடுக்கும் ஹீரோவாக இருக்கும் போதே அரசியல் பயணத்தை ஆரம்பித்து விட்டார் நடிகர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தனது கட்சிப்பெயரை தமிழக வெற்றிக்கழகம் என்று அறிவித்தார் விஜய். 

நமது இலக்கு 2024 மக்களவைத் தேர்தல் அல்ல.. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு என்று தொண்டர்களுக்கு அறிவித்தார் விஜய். 

அரசியல் கட்சி அறிவித்த பின்னர் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை சேர்க்கும் வகையில் பலதரப்பட்ட பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது. 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு கட்சி உறுப்பினர்கள் மட்டும் பொதுமக்கள் சேர்க்கையை அதிகப்படுத்த கட்சி சார்பில் புதிய செயலி ஒன்றை கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்தார் விஜய்.

மகளிர் தலைமையில் முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினர். கழகத் தோழர்களோடு இணைந்து, மக்களுக்கு உதவி செய்வார்கள் என்று கூறியிருந்தார் விஜய்.  தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் மகளிர் தினம், மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் செயலியை விஜய் அறிமுகம் செய்து வைத்து கட்சியின் முதல் உறுப்பினராக இணைந்தார்.

மக்களவைத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று எதுவுமே சொல்லவில்லை விஜய். திடீரென வந்து வாக்களித்து விட்டு சென்றார். இந்த நிலையில்தான் 2026ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறது விஜய் மக்கள் இயக்கம். இதற்காக சென்னையின் முக்கிய இடங்களில் சுவர்களில் விளம்பரம் செய்வதற்காக இப்போதே முன்பதிவு செய்து வருகின்றனர். 

2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில்  களமிறங்கும் வகையில் உறுப்பினர் சேர்க்கை ,பூத் கமிட்டிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான்  மெட்ராஸ் பட பாணியில் தமிழக வெற்றிக்கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விளம்பரம் செய்யத் தொடங்கி விட்டனர். 

சென்னையில் அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் சுவர்களை பிடித்திருக்கின்றனர். முன்னணி தேசிய கட்சிகளுடன் போட்டி போட்டு தற்போது விளம்பரத்திற்கான சுவர்களை பிடித்து வருகிறது. பல இடங்களில் TVK என்று எழுதப்பட்டுள்ளது. இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் பதிவுகள் மூலம் விளம்பரம் செய்து பலரும் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் நிலையில் விஜய் அரசியல் மெட்ராஸ் பட பணியில் சுவர் விளம்பரத்தில் இருந்து தொடங்கியுள்ளது. விஜய் அரசியல் அதிரடியாக இருக்குமா பார்க்கலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow