உறுப்பினர்களை பழிவாங்கும் ராதாரவி... சூர்யாவை இப்படிதான் நீக்குனாங்க!... எஸ்.வி.சேகர் ஓபன் டாக்!

தொடர்ந்து டப்பிங் சங்கத்தில் முறைகேடு செய்து உறுப்பினர்களை ராதாரவி பழி வாங்குகிறார் என நடிகரும் இயக்குநருமான எஸ்.வி.சேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

Nov 6, 2024 - 19:18
உறுப்பினர்களை பழிவாங்கும் ராதாரவி... சூர்யாவை இப்படிதான் நீக்குனாங்க!... எஸ்.வி.சேகர் ஓபன் டாக்!
உறுப்பினர்களை பழிவாங்கும் ராதாரவி... சூர்யாவை இப்படிதான் நீக்குனாங்க!... எஸ்.வி.சேகர் ஓபன் டாக்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகரும் இயக்குநருமான எஸ்.வி.சேகர், “ஏறத்தாழ 2 கோடி ரூபாய் பெறுமானமுள்ள டப்பிங் சங்க கட்டிடம் இடிக்கப்பட காரணம், கட்டிட அனுமதி வாங்கியதாக 75 ஆயிரம் ரூபாய் (ரொக்கம்) கணக்கு காட்டிவிட்டு, அந்த பணத்தை அரசாங்கத்திற்கு செலுத்தி கட்டிட அனுமதி வாங்காமல் சங்க அலுவலகம் கட்டியதால், அது தொடர்பான வழக்கில் டப்பிங் சங்கம் தோல்வி அடைந்தது. முறைகேடான கட்டிடத்தை இடிக்கும்படி நீதிமன்றமே உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசாங்கம் அல்ல. ஆனால் அரசியல் உள்நோக்கத்தோடு தொடர்ந்து அவதூறு பேசி வரும் ராதாரவி தமிழ்நாடு அரசாங்கம் தன்னை பழிவாங்கவே பதில் சங்க கட்டிடத்தை இடித்ததாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். திரைத்துறை தொழிலாளர்களுக்கு நலத் திட்டங்களை வழங்கி வரும் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு எதிராக தீவிரமான விமர்சனங்களையும் கருத்துகளையும் சங்க விழாக்களிலும் சங்க கூட்டங்களிலும் ராதாரவி பதிவு செய்வதும், அதை ஃபெப்சி தலைவர் செல்வமணி வெளிப்படையாக ஆதரித்து வருவதும் ஒட்டு மொத்த தமிழ்த் திரைத்துறை தொழிலாளர்களுக்கும் எதிரான துரோகம்.

இந்த நிலையில், சமீபத்தில் திருத்தப்பட்ட டப்பிங் சங்க விதிகள் ஜூலை 2024-ல் தான் நடைமுறைக்கு வந்தது. ஒரு புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு அதில் புதிதாக இணைபவர்களுக்கு மட்டுமே, திருத்தப்பட்ட கட்ட‌ண‌ங்க‌ள்  உட்பட பல விதிகள் பொருந்தும். சுமார் 40 வருட‌ங்க‌ளாக‌  உறுப்பினர்களாக இருப்பவர்கள் பல ஆண்டுகளாக இன்னொரு சங்கத்திலும் உறுப்பினராக இருந்தால், சமீபத்தில் திருத்தப்பட்ட சட்டப்படி,  டப்பிங் சங்க உறுப்பினர் அந்தஸ்தை இழப்பார்கள் என்று சொல்வது பொருந்தாது. அது ஏற்புடையதும் அல்ல. 

கொரோனா காலகட்டத்தில் லட்சக்கணக்கில் தன் சுயநிதியை அளித்து டப்பிங் சங்க உறுப்பினர்களுக்கு பேருதவி செய்த அதன் உறுப்பினரான நடிகர் சூர்யா சமீபத்தில் ரூபாய் 200 சந்தா செலுத்தவில்லை என்று காரணம் கூறி அவரையும் ராதாரவியின் நிர்வாகம் சங்க நீக்கம் செய்ததும், அவர் அளித்த நிதி பெரும்பான்மை உறுப்பினர்களுக்கு இன்று வ‌ரை சென்று சேரவே இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. லட்சக்கணக்கில் நிதி உதவி செய்தவர் ரூபாய் 200 செலுத்தவில்லை என்று குறிப்பிட்டு அவரை சங்க நீக்கம் செய்த நன்றி கெட்ட ராதாரவியின் நிர்வாகத்தை அரசுத் துறை அதிகாரிகளும் பெப்சி நிர்வாகமும் தொடர்ந்து ஆதரித்து வரும் காரணம் புதிராக உள்ளது.

முறைகேடாக கட்டப்பட்ட டப்பிங் சங்க கட்டிடம் நீதிமன்ற உத்தரவால் இடிக்கப்பட்டது, சங்க உறுப்பினர்களில் தமிழ் பின்னணிக் குரல் கலைஞர்களின் சம்பளத்தில் பத்து சதவிகிதத்தை சங்கம் கட்டாய பிடித்தம் செய்து வருவது, தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடுபவர்களை ராதாரவி சங்க நீக்கம் செய்து வருவது, தொழிற்சங்க விதிகளுக்கு முரணாக சர்வாதிகார பொதுக்குழு நடத்துவது, குறிப்பிட்ட வரைமுறைக்கு மேல் பெரும் சங்க நிதியை வீண் செலவுகளுக்கு விரயமாக்குவது என ராதாரவியும் அவர் நிர்வாகமும் தொடர்ந்து செய்யும் எல்லா சட்டவிரோத செயல்கள் குறித்தும் உறுப்பினர்கள் புகார் செய்த பின்பும் அதைத் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது ஏன் ? திரைத்துறை தொழிலாளர் சங்கங்கள் அனைத்திற்கும் களங்கமாக இருந்து வரும் ராதாரவியின் டப்பிங் சங்க நிர்வாகம், கேள்வி கேட்கும் உறுப்பினர்கள் மீது கட்டவிழ்த்து விடும் சங்க நீக்க நடவடிக்கை, வேலை வாய்ப்பை பறிக்கும் நடவடிக்கைள் அனைத்தையும் அறிந்தும், தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டிய பெப்சி அமைப்பு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் ??

சக தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு தரக்கூடாது என ராதாரவியும், அவர் நிர்வாகமும் வேலை வாய்ப்பு தருபவர்களை அலைபேசியில் அழைத்தும், கடிதம் மூலமாகவும் மிரட்டுவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்பும், லேபர் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் ராதாரவி மற்றும் அவர் நிர்வாகத்தை கேடயமாக நின்று பாதுகாத்து வருவது பெரும் வேதனைக்குரியது. அரசாங்கம் உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், பொதுச் சட்டங்களும், தொழிற்சங்க சட்ட விதிகளும் தொடர்ந்து மீறப்பட இது ஒரு முன்னுதாரணமாக மாறுவதற்கு வழி வகுத்து தந்தது போல அமைந்து விடும்” எனத் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow