பாரத ரத்னா விருதுக்கு மட்டும் அவ்வளவு சிறப்பு என்ன..?
இந்தியாவில் பல்வேறு துறைகளில் விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் பாரத ரத்னா விருதுக்கு மட்டும் அவ்வளவு சிறப்பு என்ன? இதன் சிறப்பை அறிவதற்கு முன் இதனை முதன்முதலில் வாங்கியவர்கள் சி.ராஜகோபாலாச்சாரி, டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் விஞ்ஞானி டாக்டர் சி.வி.ராமன் ஆகியோர் என்பதிலிருந்தே இந்த விருது எந்த அளவு சிறப்பு வாய்ந்தது என்பதை சொல்லி விட முடியும்.
இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுதான் பாரத ரத்னா.! அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவார்களுக்கு பாரத ரத்னா வழங்கப்படுகிறது. ஜனவரி 2,1954 முதல் வழங்கப்பட்டு வருகிறது பாரத ரத்னா, அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் மூலம் பாரத ரத்னா விருது வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் சி.ராஜகோபாலாச்சாரி, குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் விஞ்ஞானி டாக்டர் சி.வி.ராமன் ஆகியோருக்கு முதன்முதலாக கடந்த 1954ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர், அவரவர் துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய பல்வேறு நபர்களுக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
1954ல், உயிருடன் இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்த அங்கீகாரம், 1955ல் இறந்தவர்களுக்கும் வழங்கலாம் என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. அதன்பிறகு சட்டமேதை அண்ணல் அம்பேத்கர், தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் போன்றோருக்கு அவர்களின் இறப்புக்குப் பிறகு இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தின்போது விருது வழங்கப்படுகிறது. பாரத ரத்னா விருதை இன்னாருக்கு வழங்கலாம் என்ற பரிந்துரையை குடியரசு தலைவருக்கு பிரதமர் வழங்குவார். சாதி, தொழில், பதவி அல்லது பாலினம் ஆகிய பாகுபாடின்றி எந்த ஒரு நபரும் இந்த விருதுக்கு தகுதியானவராக கருதப்படுவார்.
குறிப்பிட்ட ஓர் ஆண்டில் அதிகபட்சமாக 3 நபர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படலாம். அதேவேளையில், ஒவ்வோர் ஆண்டும் இந்த விருது வழங்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. பாரத ரத்னா விருது பெறுவோருக்கு அதற்கான சான்றிதழும் பதக்கமும் வழங்கப்படும். பணம் ஏதும் வழங்கப்படாது.
விருதை பெற்றவர்களுக்கு அரசு துறைகள் சார்பாக சில வசதிகள் செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பாரத ரத்னா பெற்றவர்களுக்கு ரயில்வே துறை சார்பில் இலவச பயணத்துக்கான, விமானங்களில் வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
அரசின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
முன்னுரிமை வரிசையில் இவர்களை அரசாங்கம் வைக்கும் குறிப்பாக குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், குடியரசு முன்னாள் தலைவர், துணைப் பிரதமர், தலைமை நீதிபதி, லோக்சபா சபாநாயகர், மத்திய அமைச்சர், மாநில முதலமைச்சர்கள், முன்னாள் பிரதமர், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்படும்.
இதையும் படிக்க | தன்னலம் பாராமல் சமூக நலன் காக்கும் கார்த்தியின் மக்களை கெளரவிக்கும் விழா !
What's Your Reaction?