பிரதமர் மோடியை நேருக்கு நேர் அழைத்த ராகுல்காந்தி... நாடே காத்திருக்கிறது..!
மக்களவைத் தேர்தல் குறித்த பொது விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என நாடே எதிர்பார்த்துக் காத்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அனல்பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நிறைவுபெற்ற நிலையில் நாளை 4-கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர், அஜித் பி.ஷா, மூத்த பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்டோர் பிரதமர் மோடியும் ராகுல்காந்தியும் பொது விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தனர். மக்களவைத் தேர்தல் பிரச்னைகள் குறித்தும் மக்கள் உண்மைகளைத் தெரிந்து கொண்டு வாக்கு செலுத்துவதற்காகவும் இந்த விவாதம் தேவைப்படுவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த அழைப்பை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி ஏற்றுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்த விவாதம் நமது பார்வையை மக்கள் புரிந்து கொள்ள உதவும். ஆக்கப்பூர்வமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பொது விவாதத்தில் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
மேலும், “ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கான ஒரே மேடையில், பிரதான கட்சிகள் தங்கள் பார்வையை முன்வைப்பது நேர்மறையான முன்முயற்சியாக இருக்கும். இந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி பங்கேற்பார் என நாடே எதிர்பார்க்கிறது” எனவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் ராகுல்காந்தியின் அழைப்பை ஏற்று பொது விவாதத்தில் பிரதமர் கலந்துகொள்வாரா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.
What's Your Reaction?