Delhi Ganesh: பட்டின பிரவேசம் முதல் இந்தியன் 2 வரை...நடிகர் டெல்லி கணேஷின் திரைப்பயணம்
நடிகர் டெல்லி கணேஷ் 1994-ல் கலைமாமணி விருது வென்றார்.
நடிகர் டெல்லி கணேஷ் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் இரங்கலும், நேரில் அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (80) வயது மூப்பு மற்றும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நடிகர் டெல்லி கணேஷ் நடிகர்கள் கமல், ரஜினிகாந்த், சூர்யா, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் டெல்லி கணேஷ் ஆகஸ்டு 1ம் தேதி 1944-ல் நெல்லையில் பிறந்தார். இவருடன் உடன் பிறந்தவர்கள் 11 பேர். இதில் 9 ஆண்கள், 2 பெண்கள் அடங்குவர். டெல்லி கணேஷ் முதலில் விமானப்படையில் வேலை செய்து வந்துள்ளார். சுமார் 10 ஆண்டுகள் விமான படையில் வேலை பார்த்த இவர், பின்னர் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று அப்பணியில் இருந்து விலகியுள்ளார். அதன் பின்னர் 1976-ல் இயக்குநர் கே.பாலச்சந்தரின் ‘பட்டின பிரவேசம்' என்னும் படத்தில் அறிமுகமானார்.
பின்னர் நடிகர் கமலின் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் வில்லனாக நடித்து மிரட்டினார். மேலும் சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காம ராஜன், தெனாலி, அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களில் தனது யதார்தமான நடிப்பால் மக்களின் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.
இதைத்தொடர்ந்து 1994-ல் கலைமாமணி விருது வென்றார். மேலும் குறும்படங்கள், டிவி நெடுந்தொடர்கள், வெப் சீரிஸ்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.சமீபத்தில் திரைக்கு வந்த ரத்னம், அரண்மனை 4, இந்தியன் 2 ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். எப்பொழுதும் போல தனது வீட்டில் மகனுடன் பேசிவிட்டு தூங்கச் சென்றவருக்கு தூக்கத்திலே உயிர் பிரிந்துள்ளது. இவரது மறைவுக்கு பல்வேறு நடிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
What's Your Reaction?