DELIMITATION BILL : மு.க.ஸ்டாலின் இல்லத்தில் குவிந்த தேசியத் தலைவர்கள்! மனம் மாறுமா திமுக!
தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்று வரும் முக்கியப் பேச்சுவார்த்தை தேசிய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்தியா கூட்டணித் தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், மு.க.ஸ்டாலினுடன் முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திமுக எடுத்துள்ள நிலைப்பாடு தேசிய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டுவரவுள்ள இந்த மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் முடிவை மாற்றும் முயற்சியில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இல்லத்திற்கு இந்தியா கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் வருகை தந்துள்ளனர். பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் அவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.
திமுகவின் ஆதரவு முடிவு
நவம்பர் 28ஆம் தேதி நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதிய வரைவு மசோதாவில் திமுக முன்வைத்த இரண்டு முக்கியக் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாகக் கூறி, இந்த முடிவை எடுத்துள்ளதாக அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே, திமுகவின் நிலைப்பாடு இந்தியா கூட்டணிக் கட்சிகள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டாலினைச் சந்தித்த இந்தியா கூட்டணித் தலைவர்கள்
தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என இந்தியா கூட்டணித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, அவரது கட்சியின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக்காக வருகை தந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மமதா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களை மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தின் வாசலில் நின்று வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்றார்.
முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மமதா பானர்ஜி, டி.கே.சிவகுமார், வி.டி.சதீசன், ரேவந்த் ரெட்டி, எம்.ஏ.பேபி, கே.சி.வேணுகோபால், கபில் சிபல் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் ஆலோசனையில் இடம்பெற்றுள்ளனர்.
திமுகவின் நிலைப்பாட்டில் மாற்றம் வருமா?
நவம்பர் 30ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தச் சூழலில், மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்கக் கூடாது என்றும், எதிர்க்கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் இந்தியா கூட்டணித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே அறிவித்த ஆதரவு முடிவில் திமுக உறுதியாக இருக்குமா அல்லது கூட்டணித் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமா என்பது பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின்னரே தெரியவரும்.
What's Your Reaction?