OTT- ல இந்த வாரம் Double Treat ! நானியின் ‘THE PARADISE’, கார்த்திக் சுப்புராஜின் ‘DOROTHY’ !
இந்த வாரம் ஓடிடியில் அடுத்தடுத்து வெளியாகும் நானியின் ‘தி பாரடைஸ்’(THE PARADISE), கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’(DOROTHY) படங்கள் குறித்த முழு விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!
திரையரங்குகளில் திரைப்படங்களைத் தவறவிட்ட ரசிகர்களுக்கு இந்த வாரம் ஓடிடி தளத்தில் இரண்டு முக்கியமான படங்கள் விருந்தளிக்க உள்ளன. நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’(THE PARADISE) மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘டோரதி’(DOROTHY) ஆகிய திரைப்படங்கள் நெட்பிளிக்ஸ்(NETFLIX) ஓடிடி தளத்தில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இரு படங்களும் வெவ்வேறு கதைக்களங்களைக் கொண்டிருப்பதால், ஓடிடி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
அக்டோபர் 22-ல் வெளியாகும் நானியின் ‘தி பாரடைஸ்’
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நானி நடிப்பில் உருவான திரைப்படம் ‘தி பாரடைஸ்’(THE PARADISE). ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ள இப்படத்தை எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, சோனாலி குல்கர்னி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை, அவர்களின் போராட்டங்கள் மற்றும் எழுச்சி ஆகியவற்றைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், உணர்வுப்பூர்வமான குடும்ப உறவுகளையும் மையப்படுத்துகிறது. குறிப்பாக, தாய் - மகன் உறவைச் சுற்றியுள்ள உணர்ச்சிகரமான அம்சங்கள் கதையில் முக்கிய இடம் பெற்றுள்ளன.
திரையரங்குகளில் வெளியானபோது இப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதே நேரத்தில், படத்தின் இசை மற்றும் பிரம்மாண்டமான காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இப்படம் ரூ.175 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ‘தி பாரடைஸ்’ திரைப்படம் அக்டோபர் 22-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. திரையரங்குகளில் இப்படத்தைப் பார்க்க முடியாத ரசிகர்கள் வீட்டிலிருந்தபடியே படத்தைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
அக்டோபர் 23-ல் ஓடிடிக்கு வரும் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘டோரதி’(DOROTHY). கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளதும் ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் பெற செய்தது.
கார்த்திக் சுப்புராஜின் இயக்கப் பயணத்தில் 10-வது திரைப்படமாகக் குறிப்பிடப்படும் ‘டோரதி’, வழக்கமான கதைக்களங்களிலிருந்து மாறுபட்டு மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
1990-களின் மதுரையைப் பின்னணியாகக் கொண்ட இப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு கவனத்தைப் பெற்றது. பின்னர் திரையரங்குகளில் வெளியானபோது படத்தின் கதைக்களம், காட்சியமைப்பு மற்றும் அணுகுமுறை குறித்து ரசிகர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் எழுந்தன. அதே சமயம், படத்தில் இடம்பெற்ற ‘கல்யாண விருந்து’, ‘முத்துமணி’ உள்ளிட்ட பாடல்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
இந்நிலையில், ‘டோரதி’ திரைப்படம் அக்டோபர் 23-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. திரையரங்குகளில் இப்படத்தைத் தவறவிட்டவர்கள் தற்போது ஓடிடி வாயிலாகப் பார்க்கலாம்.
ஒரே வாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் 2 படங்கள்!
இந்த வார ஓடிடி வெளியீடுகளில் ‘தி பாரடைஸ்’, ‘டோரதி’ ஆகிய இரு படங்களும் கவனம் பெற்றுள்ளன. அக்டோபர் 22-ம் தேதி நானியின் ‘தி பாரடைஸ்’ வெளியாகும் நிலையில், அதற்கு அடுத்த நாளான அக்டோபர் 23-ம் தேதி கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ வெளியாகிறது.
ஒருபுறம் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி மற்றும் உணர்வுகளைப் பேசும் ‘தி பாரடைஸ்’; மறுபுறம் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தும் ‘டோரதி’ என, இரு திரைப்படங்களும் வெவ்வேறு கதைக்களங்களைக் கொண்டுள்ளன.
இவ்விரு படங்களையும் திரையரங்கில் பார்க்க தவறியவர்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. மிஸ் பண்ணிடவேண்டாம்..
சமீபத்தில், வெளியாகி வெற்றியடைந்த இவ்விரு படங்களையும் NETFLIX ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து வெளியாகும் இந்த இரண்டு படங்களும் ஓடிடி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
What's Your Reaction?

