INDI கூட்டணியில் தவெக? விலகும் திமுக? அறிவாலயம் அப்டேட்ஸ்..!
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ் வெளியேறிய நிலையில், இண்டி கூட்டணி மீட்டிங்கை திமுக புறக்கணிக்க முடிவு செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
த.வெக ஆட்சி அமைக்க தடுமாறியபோது, தி.மு.க. கூட்டணியில் இருந்து முதல் ஆளாக வெளியேறிய காங்கிரஸ், த.வெ.க.வை ஆதரித்து, பின்பு அமைச்சரவையிலும் இடம் பிடித்தது. அப்போதே காங்கிரஸுக்கு எதிராக கச்சை கட்டிய திமுக, தேசிய அரசியலில் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை உருவாக்க காய்நகர்த்த தொடங்கிவிட்டது என உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் இருக்கைகளுக்கு அருகேயுள்ள திமுக இருக்கைக்களை வேறு இடத்துக்கு மாற்றும்படி சமீபத்தில் கனிமொழி கேட்ட அன்றே இண்டியா கூட்டணியிலிருந்து தி.மு.க. வெளியேறுவது உறுதியாகிவிட்டது என்று கூறப்பட்டது.
அதற்கேற்ப தமிழகத்தில் காலியான சி.வி.சண்முகத்தின் ராஜ்ய சபா எம்.பி. சீட்டை காங்கிரஸுக்கு ஒதுக்குவதாக அறிவித்துவிட்டது தவெக.
இந்த நிலையில், வரும் ஜூன் 8ம் தேதி டெல்லியில் இண்டியா கூட்டணி கூட்டம் நடைபெற உள்ளது.
இதற்கான அழைப்பை சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட 15 கட்சிகளுக்கு காங்கிரஸ் அனுப்பிவிட்டது. சொல்லப்போனால், தமிழ்நாட்டில் வி.சி.க. மதிமு.க. ஆகிய கட்சிகளுக்கு கூட அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் திமுகவிற்கு ஜூன் 3 வரை அழைப்புவிடுக்கப்படவில்லை.
இதனிடையே, இந்த கூட்டத்தில் த.வெ.க. பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் மேலிட தலைவர்கள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இண்டியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவாலயம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் "இண்டி” கூட்டணிக் கூட்டத்தில், காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது! அதே நேரத்தில் – இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் குரல் கொடுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?