இளையராஜாவின் ‘RAJA BLISS’... செப்.5 வெளியாகும் டோரதி பின்னணி இசை!

இளையராஜாவின் இசை மாயாஜாலத்தில் உருவான ‘டோரதி’ படத்தின் BGM ஆல்பம் வெளியாகும் படக்குழுவின் அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sep 4, 2026 - 15:00
இளையராஜாவின் ‘RAJA BLISS’... செப்.5 வெளியாகும் டோரதி பின்னணி இசை!
Raja Bliss: Dorothy Background Album Score Release

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களையும் வித்தியாசமான திரைப்பட அனுபவங்களையும் வழங்கி வரும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பின்னணி இசை தொடர்பான முக்கிய அறிவிப்பை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜின் 10-வது திரைப்படம் ‘டோரதி’ :

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் திரைப்பயணத்தில் 10-வது படமாக உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மதுரையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது பின்னணி இசை குறித்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது.

அதிகரிக்கும் பாடல்களின் எதிர்பார்ப்பு :

‘டோரதி’ படத்தில் வெளியான ‘கல்யாண விருந்து’, ‘முத்துமணி’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இளையராஜாவின் இசையில் உருவான இந்தப் பாடல்கள் பழைய இசை உணர்வையும், இன்றைய தலைமுறைக்கான புதுமையான அணுகுமுறையையும் இணைத்து அமைந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டினர்.

மேலும், சில வாரங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.

செப். 5-ல் வெளியாகும் ‘RAJA BLISS’ :

இந்நிலையில், ‘டோரதி’ திரைப்படத்தின் முழுமையான பின்னணி இசைக்கோர்வை நாளை (செப். 5) வெளியிடப்படும் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “டோரதி படத்தின் முதல் பதிப்பை இளையராஜா சாரிடம் காண்பித்தபோது, அவரின் கருத்தை ஆவலுடன் எதிர்பார்த்தேன். படம் முடிந்த பிறகு சில நிமிடங்கள் அமைதியாக இருந்த அவர், ‘அழகான படம். நாளை காலை வேலையை ஆரம்பிக்கலாம்’ என்று கூறினார்.

எனது படத்திற்கு இசையமைக்க ராஜா சார் ஒப்புக்கொண்டது மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்த தருணமாக அமைந்தது” என தெரிவித்துள்ளார்.

மேலும், திரைப்படம் வெளியாகும் முன்பே பின்னணி இசையை தனி ஆல்பமாக வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தை இளையராஜா தெரிவித்ததாகவும் கார்த்திக் சுப்புராஜ் குறிப்பிட்டுள்ளார்.

இசை வெளியீடு விழா :

‘டோரதி’ படத்தின் பின்னணி இசை ஆல்பம் “RAJA BLISS” என்ற தலைப்பில் டிஜிட்டல் தளங்களிலும், "NOSTALAGIA" பீலிங் தரக்கூடிய வினைல் டிஸ்க் வடிவிலும் வெளியாக உள்ளது.

அதுமட்டுமின்றி, செப். 5 அன்று இமேஜ் ஆடிட்டோரியத்தில் 40 நிமிடங்கள் கொண்ட முழுமையான பின்னணி இசைக்கோர்வை நேரடி இசை நிகழ்ச்சியாகவும் நடத்தப்பட உள்ளது.

பொதுவாக திரைப்பட வெளியீட்டிற்கு பிறகு ரசிகர்களை சென்றடையும் பின்னணி இசையை, படம் திரைக்கு வருவதற்கு முன்பே தனி ஆல்பமாக வெளியிடுவது தமிழ் சினிமாவில் கவனம் ஈர்க்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இதனால் இளையராஜா ரசிகர்கள் மற்றும் இசை ரசிகர்கள் மத்தியில் ‘டோரதி’ படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow