"பீஸ் பீஸாக்கிடுவேன்" - அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ்...
பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டியதாக, தமிழ்நாடு ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது டெல்லி காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 4 ஆம் தேதி சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி திமுகவை கடுமையாக சாடியிருந்தார். மேலும் தமிழகத்தில் திமுக விரைவில் காணாமல் போகும் என்றும் பேசியிருந்தார். இந்த நிலையில் பல்லாவரத்தை அடுத்த பம்மல் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுகூட்ட நிகழ்ச்சியில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது "எவ்வளவோ பிரதமரை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால், இவ்வளவு மட்டமாக பேசக் கூடிய பிரதமரை நாங்கள் பார்த்ததில்லை. நான் அமைச்சர் என்பதால் அடக்கி வாசிக்கிறேன், இல்லாவிட்டால் பீஸ் பீஸாக்கிடுவேன்" என்று பேசியிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதற்கிடையில், பாஜகவின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் பொறுப்பாளர் அமித் மால்வியா, தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 5 பிரிவுகளில் டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
What's Your Reaction?