”10 – 15% வாக்குகளை இழந்த அதிமுக....” – இபிஎஸ் ஓபன்!

அதிமுக 10 முதல் 15 சதவீதம் வாக்குகளை இழந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Oct 1, 2024 - 14:00
”10 – 15% வாக்குகளை இழந்த அதிமுக....” – இபிஎஸ் ஓபன்!

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு தொண்டர்களிடையே உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், ”மாவட்டச் செயலாளரின் பணிகளை காணொளிகளாக பதிவிடுவது தகவல் தொழில்நுட்ப அணியின் பணி கிடையாது. மாவட்ட செயலாளரின் பணிகளை ப்ரோமோட் செய்வதும் ஐ.டி விங் வேலை இல்லை என்றார். இளைஞர்கள் கையில் 40% வாக்கு உள்ளது, இளைஞர்கள் என்ன விரும்புகின்றனர் என்பதை புரிந்து அதற்கேற்றவாறு பதிவு செய்யுங்கள். 10 முதல் 15 சதவீதம் வாக்குகளை நாம் இழந்துள்ளோம், அதனை மீட்கும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும், இளைஞர்களின் வாக்குகளை நாம் பெற வேண்டும்” எனக் கூறினார். 

தொடர்ந்து, “கட்சியின் செயல்பாடுகளை சொல்லுங்கள், பிரச்னைகளை பதிவு செய்யுங்கள். பொய் செய்திகளை முறியபடிப்பதில் ஐடி விங் பொறுப்பு முக்கியம் உள்ளது. டிஆர்பிக்காக அதிமுக பற்றி ஊடகங்கள் பேசுகிறது. குறிப்பிட்ட பத்திரிகையின் ஒரு பகுதியில் தினம்தோறும் அதிமுக பற்றி எழுதுகிறார்கள். அந்த செய்தி ஆசிரியருக்கும் செய்தியாளருக்கும் நம்மை பற்றி எழுதாவிட்டல் வயிற்று வலி வந்துவிடும் போல. தமிழகத்தில் அதிக ஊடகங்கள் உருவாக காரணமாக இருந்தது நம் ஆட்சி, ஆனால் அவர்கள் நன்றி மறந்து நம் நெஞ்சையே குத்துகிறார்கள். விவாத மேடை எனும் பெயரில் ஆட்சிக்கு ஜால்ரா போடுகிறார்கள். குடிநீர் பற்றாக்குறை இருந்தபோது அதிமுக ஆட்சிக்கு வந்தது. வெளி மாவட்டங்களில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து சென்னையில் விநியோகித்தோம். டெல்டாவை புயல் புரட்டிப் போட்டது, புயலை விட வேகமாக நிவாரண பணி மேற்கொண்டோம். அமைச்சர்கள் 3 மாதம் தங்கியிருந்து நிவாரண பணிகளை மேற்கொண்டனர்.  

அதேபோல், கொரோனாவால் 11 மாதம் அரசாங்கமே ஸ்தம்பித்தது, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியாத நிலையில் மருத்துவத்துறையில் சிறப்பாக பணி செய்தோம். இவையெல்லாம் ஒரு வரலாறு, அமெரிக்காவில் கூட நம்மைப் போல் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட முடியவில்லை. இந்தியாவில் கொரோனா தடுப்பில் நாம் முதலிடத்தில் இருப்பதாக நாட்டின் பிரதமரே பேசினார். அதேபோல் கொரோனா காரணமாக மதுக்கடையை மூடியதால் ஓராண்டு காலம் அரசாங்கத்துக்கு வருமானமே இல்லை. 40 ஆயிரம் கோடி அரசு நிதியில் இருந்து எடுத்து செலவு செய்தோம்” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow