ஏழு எலுமிச்சை... அம்மன் அருள் கிடைக்க செய்ய வேண்டிய எளிய வழிபாடு!
அம்மனுக்கு ஏழு எலுமிச்சை சமர்ப்பித்து வழிபடுவது தடைகள் நீங்கி நிம்மதி, வளம் கிடைக்க உதவும் என்ற ஆன்மிக நம்பிக்கையை இந்தக் கட்டுரை விளக்குகிறது. விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
எண்களுக்கு வலிமை உண்டு. அதேபோல் எலுமிச்சைக்கும் மகத்தான சக்தி இருக்கிறது. அதனால்தான் எலுமிச்சையை ராஜகனி என்கிறோம். எத்தனையோ விலை உயர்ந்த, சத்து கொண்ட பழங்கள் இருந்தாலும் ராஜ கனி என்கிற ராஜ அந்தஸ்து எலுமிச்சைக்கு உண்டு என்பதுதான் அதன் மிகப்பெரிய சாந்நித்யம்; சக்தி!
முக்கனிகளில் மா, பலா, வாழை என்று பெருமையாக பட்டியல் போட்டாலும் எலுமிச்சையை மிஞ்சிய பழம் வேறெதுவுமில்லை. எலுமிச்சைச்சாறு கிருமிநாசினி என்றும் சொல்லப்படுகிறது. திடீர் சோர்வு, அயர்ச்சி, மயக்கம் என்று நாம் படபடக்க, அப்போது ஒரு எலுமிச்சை பிழிந்து, சாற்றில் கொஞ்சம் சர்க்கரையும் உப்பும் சேர்த்துக் குடித்தாலே, புத்துணர்ச்சி கிடைத்துவிடும் நமக்கு!
ராஜ கனி என்று எலுமிச்சையைச் சொன்னாலும் இந்த எலுமிச்சை ராணிகளுக்கு உரியவை என்பதுதான் சுவாரஸ்யம். அதாவது பெண் தெய்வ வழிபாடுகளில், முக்கியமாக இடம்பிடிப்பது எலுமிச்சைதான்! பெண் தெய்வங்களில் பலரும் உக்கிர தெய்வங்களே! காளி, துர்கை, சாமுண்டீஸ்வரி, வாராஹி என பல தெய்வங்கள், கடும் உக்கிரத்தின் மூலமாகவும் கோப உஷ்ணத்தின் மூலமாகவும் அரக்கர்களை அழிக்கும் பொருட்டும் உருவெடுத்தவர்கள்.
அப்படி உக்கிரம் மிகுந்த தெய்வங்களுக்கு எலுமிச்சை கொண்டு வழிபாடு செய்தால், அதில் அவர்கள் உஷ்ணம் தணிந்து, குளிர்ந்து போய்விடுகிறார்களாம்! கண்ணுக்குத் தெரிகிற துஷ்டர்களை அழிப்பவள் துர்கை. துக்கங்களையெல்லாம் போக்கி, கண்ணுக்குத் தெரியாத துஷ்ட சக்திகளையும் தூர விரட்டுபவளே சக்தி. அதனால்தான் துர்கைக்கும் காளிக்கும் தேவியருக்கும் எலுமிச்சையால் தீபம் ஏற்றி வழிபடுகிறோம். எலுமிச்சை மாலை சார்த்தி பிரார்த்தனை செய்கிறோம்.
முன் ஜென்மத்தின் விளைவு கர்மா எனப்படுகிறது. நம் கர்ம வினைகளை அழித்தொழித்து, நம்மை மன்னித்து கரையேற்றும் தெய்வங்களை, பெண் தெய்வங்களை, அதனால்தான் ‘அம்மா’ என்கிறோம்.’தாயே...’ என்று அழைத்து கண்ணீர் விடுகிறோம்.’ஆத்தா’ என்று மனம் விட்டுக் கதறுகிறோம். மாரியம்மன், காளியம்மன், துர்கை,அங்காளம்மன், செல்லியம்மன், பிடாரியம்மன், கருப்பாயி முதலான தெய்வங்களை எலுமிச்சை மாலை சார்த்தி வேண்டினால், நம்மைச் சுற்றியுள்ள தீய சக்திகள் தெறித்து ஓடிவிடும். இதைத்தான் ‘நெகட்டீவ் வைப்ரேஷன்’ என்கிறோம்.
இந்த நெகட்டீவ் சக்திகளை முறியடித்து, நம் மீது நமக்கு நன்னம்பிக்கையை, தன்னம்பிக்கையை தந்து, நம்மைக் காப்பவள்தான் தேவி. எலுமிச்சையில் தீபம் ஏற்றலாம். இன்னல்களையெல்லாம் போக்கிக் காப்பாள். எலுமிச்சையை மாலையாக்கி அணிவித்து வழிபடலாம். இல்வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் வெற்றியும் புகழும் தந்து அருளுவாள். எலுமிச்சையில் சூடமேற்றி திருஷ்டி கழிக்கிற வழக்கம், கிராமங்களில் இன்றைக்கும் தொடர்ந்து வருகிறது. கண்ணேறு கழித்தல் என்று இதைச் சொல்லுகிறோம்.
‘புள்ளைக்கு திருஷ்டி பட்டிருச்சு’, ‘என் கண்ணே பட்ருச்சு’, ‘ஊரு கண்ணெல்லாம் நம்ம பசங்க மேலதான்...’ எனும் வார்த்தைகள் வெறும் சால்ஜாப்பு பேச்சுகள் அல்ல! அதனால்தான் வண்டி வாகனம் வாங்கினாலும் வண்டியில் ஏறி நீண்ட பயணம் மேற்கொண்டாலும் வீடு வாசல் வாங்கினாலும் எலுமிச்சையை நம் வீட்டுக்கு அருகில் உள்ள முச்சந்தியில், காலால் மிதித்து நசுக்கி, சதுர்திசைகளிலும் வீசி, வேண்டிக்கொள்கிறோம். அதாவது நாலாவது திசையிலும் உள்ள துஷ்ட சக்திகள், பார்வைகள் நம் மீது படாமல் இருக்கவும் தடைகள் ஏற்படாமல் இருக்கவும், இப்படியான சடங்குகளைச் செய்கிறோம்.
இவற்றில் எளிமையான எலுமிச்சை வழிபாடு... ஏழு எலுமிச்சையை அம்மன் திருவடியில் சமர்ப்பிக்கிற பிரார்த்தனையும் சேருகிறது. அருகில் உள்ள அல்லது உங்களுக்குப் பிடித்த அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனுக்கு ஏழு எலுமிச்சைகள் வழங்குங்கள். கண்ணாரத் தரிசித்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வாழ்வில் உள்ள, காரியங்களில் உள்ள தடைகள் அகலும். நாம் அனுபவிக்க வேண்டிய பூர்வீகச் சொத்து வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும்!
செவ்வாய் வெள்ளி என்றில்லாமல் எந்தநாளிலும் அம்மனுக்கு ஏழு எலுமிச்சை வழங்கலாம்; வழிபடலாம்; வரமும் வளமும் பெறலாம்!
வி.ராம்ஜி
What's Your Reaction?