என்கவுண்டர் ஜனநாயகத்துக்கு எதிரானது - கே.பாலகிருஷ்ணன் காட்டம்

என்கவுண்டர் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் காவல் துறைக்கு தண்டனை வழங்குகிற உரிமை கிடையாது என்றும் கூறியிருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

Sep 24, 2024 - 17:42
என்கவுண்டர் ஜனநாயகத்துக்கு எதிரானது - கே.பாலகிருஷ்ணன் காட்டம்
k.balakrishnan

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்குதான் இருக்கிறதே தவிர காவல் துறையினர் அந்த அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு என்கவுண்டர் செய்து கொல்வது கண்டிக்கத்தக்க்து என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ண கூறியுள்ளார். 

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு உரிமை வழங்கிட வேண்டும் என்பதை பிரதானமாகக் கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான உரிமைகள் பறிக்கப்படுவது பற்றியும், பிரதிநிதிகளுக்கான உரிமை குறித்தும் பேசினார்...

“மத்திய அரசு, மாநில அரசு  போல உள்ளாட்சி அமைப்பும் மூன்றாவது ஆட்சி அமைப்பு.  மத்திய அரசிற்கு ஏராளமான அதிகாரங்கள் இருக்கிறது. மாநில அரசுகளோ இருக்கிற அதிகாரம் போதாது என்று தங்களுக்குக் கூடுதல் அதிகாரம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறது, ஆனால் இந்த மூன்றாவது ஆட்சி முறையாக இருக்கிற உள்ளாட்சி முறையான பஞ்சாயத்து ஆட்சி முறைக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஏதோ கைதிகள் போல இருக்கின்றனர். ஒரு சாதாரண செலவை செய்ய வேண்டும் என்று சொன்னால் கூட அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளால் தீர்மானத்தை நிறைவேற்றி அமலாக்க முடியவில்லை. 

தமிழ்நாட்டில் பார்த்தோமானால் பல ஊராட்சிகள் பல பேரூராட்சிகள் இணைத்து பெரிய பெரிய மாநகராட்சிகள் உருவாக்கப்படுகிறது. ஊராட்சிகளையும் மாநகராட்சியோடு இணைக்கப்படுகின்ற காரணத்தினால் அந்த ஊராட்சியில் இருக்கக்கூடிய பலவிதமான சலுகைகள் நீங்களும் பறிக்கப்படுகிறது.” என்றவர் தூய்மைப் பணியை தனியார்மயப்படுத்துவதன் மூலம் தூய்மைப் பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் அவர்களுக்கு நிரந்தரமான வேலையும் ஊதியமும் கிடைக்காது என்றார். உள்ளாட்சி நிர்வாகம் சுதந்திரமாக செயல்படும் சூழலை உருவாக்க வேண்டும். போதுமான நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்பின் இன்றைய தேவைகள் சார்ந்து பாலகிருஷ்ணன் பேசினார். 

அவரிடம் தமிழ்நாட்டில் சமீப காலங்களில் நடைபெறும் காவல் துறையின் என்கவுண்டர்கள் குறித்துக் கேட்டதற்கு “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை என்கவுண்டர் என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. யாரையும் என்கவுண்டர் செய்கின்ற அதிகாரமோ, உரிமையோ காவல்துறைக்கு கிடையாது. எப்படிப்பட்ட குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளியாக இருந்தாலும் காவல்துறை கைது செய்து அந்த குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்திலே நிரூபிக்க வேண்டும். அதனை விசாரித்தறிந்து நீதிமன்றங்கள்தான் தண்டனை வழங்க வேண்டுமே தவிர, காவல்துறையே தண்டனை வழங்கி விடுவது பொருத்தமற்றது மட்டுமின்றி இது வன்மையான கண்டனத்துக்குரியது” என்று கூறினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow