தீயில் சிக்கி சிதைந்த ஆடுகள் : கண்ணீர்விட்டுக் கதறி அழுத விவசாயிகள்
தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை.
சிவகங்கை மானாமதுரை அருகே வயல்வெளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 38 ஆடுகள் உடல் கருகி உயிரிழந்தன.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரைச் சேர்ந்த நடராஜன் மற்றும் முருகன் ஆகியோர் தங்களது ஆடுகளை மேலப்பசலை கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் மேய்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் இருவரும் ஆட்டுக்குட்டிகளை கொட்டகையில் அடைத்து வைத்துவிட்டு மற்ற ஆடுகளை மேய்க்க அழைத்துச் சென்றனர். அப்போது பிற்பகல் நேரத்தில் எதிர்பாராத விதமாக விளைநிலங்களில் காய்ந்திருந்த புற்களில் தீப்பற்றி பரவத் தொடங்கியதாகத் தெரிகிறது. தொடர்ந்து ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கொட்டகையிலும் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் நடராஜனுக்குச் சொந்தமான 30 ஆட்டுக்குட்டிகள் மற்றும் முருகனுக்கு சொந்தமான 8 ஆட்டுக்குட்டிகள் உடல் கருகி உயிரிழந்தன. இதையடுத்து புகாரின் அடிப்படையில் மானாமதுரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாலசுதீஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
ஆடு மேய்ப்பதையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வரும் தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நடராஜன் மற்றும் முருகன் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
What's Your Reaction?