Friendship marriage: அன்பு உண்டு..உடலுறவு இல்லை.. சீனாவில் ட்ரெண்டாகும் நட்பு திருமணம்!

திருமணம் குறித்த சமூக அழுத்தங்களிலிருந்து தப்பிக்க சீனாவில் நெருங்கிய நண்பர்களை திருமணம் செய்யும் “நட்பு திருமணம்” என்கிற கலாச்சாரம் ட்ரெண்டாகி வருகிறது.

Apr 29, 2025 - 14:24
Friendship marriage: அன்பு உண்டு..உடலுறவு இல்லை.. சீனாவில் ட்ரெண்டாகும் நட்பு திருமணம்!
Friendship marriage

இந்தியாவில் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி 27 வயதை நெருங்கும் போதே... என்னப்பா? எப்போ கல்யாணம்? என சொந்தக்காரர்கள் எழுப்பும் கேள்வியை கடக்காமல் வந்திருக்க மாட்டார்கள். இன்றளவில் திருமணம் என்பது ஒரு சமூக அழுத்தமாக மாறியிருக்கும் நிலையில், திருமணம் குறித்த புரிதலும் இன்றைய இளம் வயதினர் மத்தியில் வெகுவாக மாறியுள்ளது.

திருமண உறவில் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு முன்னுரிமை கொடுக்க இன்றைய தலைமுறையினர் விரும்புகின்றனர். திருமண உறவில் தங்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கோ,விருப்பத்திற்கோ மாறாக துணையின் செயல் இருப்பின் சற்றும் யோசிக்காமல் விவகாரத்து நோக்கி நகர்கிறது இன்றைய திருமண உறவு.

Friendship marriage:

இந்நிலையில் தான், சீனாவில் சமீப காலமாக “நட்பு திருமணம்” (Friendship marriage) என்பது பிரபலமடைந்து வருகிறது. அது என்னடா புதுசா நட்பு திருமணம்? என உங்களுக்குத் தோன்றலாம். இது அவ்வளவு புதிய கலாச்சாரம் எல்லாம் இல்லை, ஏற்கெனவே ஜப்பானில் நடைமுறையில் இருந்து வருவது தான். ஜப்பானில் இதற்கென்று தனி ஏஜென்ஸியே செயல்பட்டு வருகிறது. சீனாவில் இந்த நட்பு கல்யாணம் தற்போது பிரபலமடைந்துள்ளது தான் செய்தி. 

நட்பு திருமணம் முறையில், தம்மை நன்றாக புரிந்துக்கொண்ட நல்ல நண்பர்களை திருமணம் செய்துக்கொள்கிறார்கள். இவர்களுக்குள் அன்பு உண்டு, உடலுறவு இல்லை. தங்களின் உணர்வுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக் கொள்வார்கள். ஒரே வீட்டில் வசிப்பார்கள், ஆனால் தனித்தனி படுக்கையறையினை தான் பயன்படுத்துவார்கள். இருவரும் ஒரே சேவிங்ஸ் பேங்க் அக்கௌண்டினை பயன்படுத்தி டிராவல்,சினிமா என சிறகு விரிப்பார்கள். செலவுகளை பங்கிட்டு கொள்வார்கள்.

நட்பு கல்யாணத்தில் உள்ளவர்கள், தாங்கள் விரும்பும் மற்ற நபருடன் டேட்டிங் செய்தும் கொள்ளலாம். ஒருவேளை குழந்தை பெற திட்டமிட்டால், செயற்கை கருவூட்டல் வழியாகவோ அல்லது தத்தெடுப்பு முறையினையோ தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.

நட்பு திருமணத்திற்கு ஆதரவு பெருக காரணம் என்ன?

இந்த நட்பு திருமணம் முறையினை நீங்கள் தேர்ந்தெடுக்க காரணம் என்ன? என்று சீனாவின் இளைய தலைமுறையினரிடம் கேட்பதற்கு அவர்கள் சொல்லும் பதில், ”ரொம்ப சிம்பிள்..சட்டத்தின் படி நான் திருமணம் ஆனவன். இந்த சமூகம் என்னை நோக்கி எப்போதும் திருமணம் குறித்த கேள்வி எழுப்பாது. நீண்ட வருடங்களாக திருமணம் செய்யாமல் இருக்கும் போது என் நடத்தையினை இந்த சமூகம் கேள்விக்குள்ளாக்குகிறது. நட்பு திருமணம் முறையினால் இது கொஞ்சம் குறைகிறது. இதையெல்லாம் தாண்டி நான் இந்த உறவு முறையில் சுதந்திரத்துடன் இருக்க என்னால் முடிகிறது” என பலர் தெரிவித்துள்ளனர்.

ஒருபுறம் இதற்கு ஆதரவுகள் பெருகினாலும், இன்னும் சிலர் “நட்பு திருமணம்” முறை என்பது சமூக அழுத்தங்களுக்கான தற்காலிக தீர்வு மட்டுமே எனவும் குறிப்பிடுகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow