அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி -அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு 

அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்ரமணியன் மீது சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு

Sep 23, 2024 - 09:28
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி -அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு 
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.65 லட்சம் லஞ்சம் பெற்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்ரமணியன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2011 முதல் 2016 வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் சுப்பிரமணியன். இவர் மீது  சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கோரைப்பாய் வியாபாரி முனுசாமி என்பவர் மோசடி புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியராக இருந்தவர் மூலம் 2013ல் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த என்.சுப்பிரமணியன் அறிமுகமானார். ஆதிதிராவிடர் நலத்துறையில் சமையல் பணிக்கு 80 பேர் எடுக்க உள்ளதாகவும், சேலத்தில் 20 பேருக்குப் பணி ஆணை வழங்க உள்ளதாகவும், தலா ரூ.3 லட்சம் தருபவர்களுக்குப் பணி வழங்குவேன் என்றும் கூறினார். 
அதன்படி, 20 பேர் மூலம் 2015-ல் ரூ.65 லட்சத்தை அமைச்சர் சுப்பிரமணியனிடம் கொடுத்தோம். அதை அவர் மகள் லாவண்யாவிடம் கொடுத்தார்.ஆனாலும் அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை.அதன்பின் ரூ.23.50 லட்சத்தை மட்டும் கொடுத்தார். மீதி ரூ.41.50 லட்சத்தைக் கேட்டதற்கு அடியாட்கள் வைத்து அடித்து மிரட்டினார்.  மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். எனவே, முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மகள், மகன் மற்றும் அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது பணத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார். 
அதனடிப்படையில், சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மகள் லாவண்யா ஆகியோர்  மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow