இபிஎஸ் மீது செல்போன் வீச்சு- கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ் மகன்
இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்கவும், தலைவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தல்
எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் எறிந்த சம்பவத்திற்கு ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஐடி விங் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
முன்னதாக எல்.இ.டி பதாகைகளை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் ஒன்று விழுந்தது. கன்னத்தில் செல்போன் விழுந்த நிலையில், முதலில் அதிர்ச்சி அடைந்த இபிஎஸ், பின்னர் சிரித்த முகத்துடன் கடந்து சென்றார். இதனால் அருகில் இருந்த திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். செல்போன் வீசியவர்கள் யார் என்று விசாரித்தனர். ஆனால் செல்போனை வீசவில்லை என்றும் இபிஎஸ்ஸூடன் புகைப்பட எடுக்க முயன்றபோது செல்போன் தவறுதலாக மேலே விழுந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் எறிந்த சம்பவத்திற்கு ஓபிஎஸ் மகனும், தேனி முன்னாள் எம்.பியுமான ரவீந்திரநாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “இன்று மிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி மீது தொலைபேசி எறிந்த செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன். இது முற்றிலும் அநாகரிகமான செயலாகும்.
அரசியல் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்குப் பின்னால் இருந்து வந்தாலும், நம்முடைய மரியாதையும் சீர்திருத்தமும் குறைவாகக் கூடாது. வன்முறையைத் தூண்டக்கூடாது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.மேலும் இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்கவும், தலைவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழ்நாடு காவல்துறை மற்றும் பாதுகாவல் பணியாளர்கள் மிகுந்த கவனத்துடனும், கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?