"துபாயில் சித்ரவதை செய்றாங்க...கணவரை மீட்டு தாருங்கள்"... இரும்பு ராடால் அடிக்கும் ஏஜெண்ட்!

துபாயில் வேலைக்காக சென்ற இளைஞரை, ஏஜெண்ட் ஒருவர் இரும்பு ராடால் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் வெளியான நிலையில், மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த இளைஞரின் மனைவி சிவகங்கை ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

Apr 20, 2024 - 20:07
"துபாயில் சித்ரவதை செய்றாங்க...கணவரை மீட்டு தாருங்கள்"... இரும்பு ராடால் அடிக்கும் ஏஜெண்ட்!

சிவகங்கை மாவட்டம் கூத்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மதுபாலா என்பவரை திருமணம் செய்து கொண்டு உள்ளூரில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக ஏஜெண்ட் மூலம் துபாய் நாட்டிற்கு பார்த்திபன் வேலைக்காக சென்றிருக்கிறார். 

இந்த நிலையில், துபாயில் தாம் சித்ரவதைக்கு ஆளாவதாகவும், இங்கிருக்கும் ஏஜெண்ட்டுகள் தன்னை கொடூரமாக தாக்கி துன்புறுத்துவதாகவும், தனது மனைவி மதுபாலாவிடம் தொலைபேசியில் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், ஏஜெண்ட் இரும்பு ராடால் அடிக்கும் வீடியோவையும் மனைவி மதுபாலாவிற்கு அவர் அனுப்பியிருக்கிறார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மதுபாலா, சம்பந்தப்பட்ட ஏஜென்ட்டிடம் கேட்ட போது, "பார்த்திபன் உயிரோடு தான் இருக்கிறார்.. இரண்டு லட்சம் கொடுத்தால் அவரை தமிழ்நாட்டிற்கு கூட்டி வருகிறோம்" என திமிராக கூறியதாக தெரிகிறது. இதனால் செய்வதறியாமல் தவித்த மதுபாலா, சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த சில தினங்களுக்கு மனு கொடுக்க வந்திருக்கிறார். அப்போது, தேர்தல் முடிந்தவுடன் வருமாறு அறிவுறுத்திய நிலையில், கைகுழந்தையுடன் மீண்டும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மதுபாலா, இக்கட்டான நிலையில், நண்பர்கள் உதவியுடன் அங்கு வசிக்கும் கணவரை மீட்டுத் தர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தனது கணவருக்கு உணவு கூட ஒழுங்காக வழங்கப்படவில்லை. அதனால், அவரை எப்படியாவது சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுபாலா ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow