லட்டு சத்தியம் செய்வாரா முதலமைச்சர்? சந்திரபாபுவிற்கு சவால்விடும் TTDயின் முன்னாள் தலைவர்!

திருப்பதி லட்டு குறித்து சந்திரபாபு வைக்கும் குற்றச்சாட்டிற்கு, அவர் சத்தியம் செய்யத் தயாரா..? என்று தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவரான ஒய்.வி.சுப்பா ரெட்டி சவால் விடுத்துள்ளார். 

Sep 19, 2024 - 17:11
லட்டு சத்தியம் செய்வாரா முதலமைச்சர்? சந்திரபாபுவிற்கு சவால்விடும் TTDயின் முன்னாள் தலைவர்!

ஆந்திர மாநிலத்தின் அடையாளமான திருப்பதியில் லட்டு தயாரிக்க, விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. ஆந்திரவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி நடந்த போது இவ்வாறு நடந்ததாக, தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடு, “2019 முதல் 2024 வரையிலான ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆட்சியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மிகவும் புனிதமான திருமலை ஏழுமலையான் கோவிலில் ஜெகன் நிர்வாகம் பிரசாதத்தில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஜெகன், ஒய்எஸ்ஆர்சிபி அரசை பார்த்து வெட்கப்படுகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
 
சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுகளை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கடுமையாக மறுத்துள்ளது.  சந்திரபாபு நாயுடு திருமலையின் புனிதத்தையும் பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி பேசியுள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர்  காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், சந்திரபாபு வைக்கும் குற்றச்சாட்டிற்கு சத்தியம் செய்யத் தயாரா என்று அவருக்கு சவால் விட்டுள்ளார் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினரும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான ஒய்.வி.சுப்பா ரெட்டி. 

அதில், பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த, திருமலை பிரசாதம் வழங்கும் விஷயத்தில் நானும், எனது குடும்பத்தினரும் அந்த கடவுளின் சாட்சியாக சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். நாயுடுவும் குடும்பத்துடன் வந்து சத்தியம் செய்ய தயாரா? மனிதப் பிறவியில் பிறந்த எவரும் இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசுவதில்லை, இப்படி குற்றம்சாட்டுவதில்லை. அரசியலுக்காக எந்த மட்டத்திலும் இறங்கவும் தயங்கமாட்டார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது என்று ஒய்.வி.சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow