Thangalaan: 'தங்கலான்' விக்ரம் கெட்-அப்பில் படம் பார்க்க வந்த ரசிகர்கள்.. தியேட்டரில் அனுமதி மறுப்பு!
திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள ஒரு திரையரங்கில் 'தங்கலான்' படம் திரையிடப்பட்டது. அங்கு படத்தை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்தனர். அப்போது சில ரசிகர்கள் 'தங்கலான்' படத்தில் விக்ரம் நடித்த கதாபாத்திரம் போன்று வேடமணிந்து திரையரங்கிற்கு வந்தனர். விக்ரம் ரசிகர்கள் அவர்களுடன் செஃல்பி எடுத்துக் கொண்டனர்.
திருச்சி: தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பா ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சீயான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி என முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான பல்வேறு படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் 'தங்கலான்' படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு நிலவியது.
அத்துடன் விக்ரம்-பா ரஞ்சித் கூட்டணியில் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. விக்ரம் இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார். பீரியட் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார். அதாவது கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஜிஎஃப் எனப்படும் கோலார் தங்கச் சுரங்கத்தை பின்னணியாக வைத்து 'தங்கலான்' படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், 'தங்கலான்' படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. பா ரஞ்சித்தின் திரைக்கதை மற்றும் மேக்கிங் ஸ்டைல் நன்றாக உள்ளதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும் விக்ரம், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பு படத்துக்கு பலம் சேர்த்துள்ளதாகவும், ஜிவி பிரகாஷின் பின்னணி இசை படத்துக்கு முதுகெலும்பு எனவும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
அதே வேளையில் 'சார்பட்டா பரம்பரை' படம் அளவுக்கு தங்கலானில் பா.ரஞ்சித் மேஜிக் நிகழ்த்தவில்லை என்றும் தனது வழக்கமான டிரேட் மார்க் கதையை விட்டு விலகி மாய உலகம், வரலாற்று புனைவு என புதிய பாதையில் பா ரஞ்சித் சென்றது அந்த அளவுக்கு எடுபடவில்லை எனவும் ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
கலவையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், 'தங்கலான்' படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, நெல்லை போன்ற பெருநகரங்களில் உள்ள திரையரங்குகள் ஹவுஸ்புல்லாக நிரம்பி வழிகின்றன. பா ரஞ்சித் மற்றும் விக்ரம் ரசிகர்கள் தங்கலான் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள ஒரு திரையரங்கில் 'தங்கலான்' படம் திரையிடப்பட்டது. அங்கு படத்தை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்தனர். அப்போது சில ரசிகர்கள் 'தங்கலான்' படத்தில் விக்ரம் நடித்த கதாபாத்திரம் போன்று வேடமணிந்து திரையரங்கிற்கு வந்தனர். விக்ரம் ரசிகர்கள் அவர்களுடன் செஃல்பி எடுத்துக் கொண்டனர்.
அதே வேளையில், இதை பார்த்த திரையரங்கு ஊழியர்கள் மேலாடையின்றி உள்ளே வரக்கூடாது என்று தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கும், திரையரங்கு ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர் விக்ரம் கெட்டப்பில் வந்த ரசிகர்கள், சட்டை அணிந்த பிறகே திரையரங்கின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
What's Your Reaction?