தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025: முக்கிய அம்சங்கள் என்ன?

”எதிர்காலத்திற்கு தேவையான பார்வையுடன் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை (பள்ளிக் கல்வி) உருவாக்கியுள்ளோம்” என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025: முக்கிய அம்சங்கள் என்ன?
key features on tamil nadu state education policy 2025

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கையானது (State Education Policy – SEP 2025), மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையினை (NEP 2020) முழுமையாகப் பின்பற்றாமல், மாநிலத்தின் சமூக நீதி, மொழி, கலாச்சாரம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (8.8.2025) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், "தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-பள்ளிக்கல்வி"-யினை வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு-

இருமொழிக் கொள்கை: தமிழகத்தில் தொடர்ந்து இருமொழிக் கொள்கை தான் கடைபிடிக்கப்படும். தமிழ் முதன்மை மொழியாகவும், ஆங்கிலம் இரண்டாம் மொழியாகவும் கொண்டு பள்ளிக்கல்வித் துறையில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும்.

தேர்வு முறையில் சீர்திருத்தம்: மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடத்தப்படும். 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தொடர்ச்சியான மதிப்பீடு மூலம் தேர்ச்சி உறுதி செய்யப்படும். தற்போது 11 ஆம் வகுப்பிற்கும் பொதுத் தேர்வு நடைப்பெற்று வரும் நிலையில், நடப்பு கல்வியாண்டு முதல் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அனைவரையும் உள்ளடக்கிய கல்வி: சாதி, மதம், பாலினம், இடம் மற்றும் திறமை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகள் வழங்கப்படும்.

அடிப்படை எழுத்தறிவும் எண்ணறிவும் (BLN): மூன்றாம் வகுப்பு முடிவதற்குள் அனைத்து மாணவர்களும் வாசிக்கவும், அடிப்படை கணிதச் செயல்பாடுகளை மேற்கொள்ளவும் திறன் பெறுவதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பாடத்திட்ட மாற்றம்: மனப்பாடம் செய்வதைக் குறைத்து, மாணவர்களின் அனுபவம், செயல்பாடு மற்றும் கேள்விகள் மூலம் கற்றல் திறன் ஊக்குவிக்கப்படும். படிப்பவர்களாக மட்டுமல்ல, படைப்பாற்றல் உள்ளவர்களாக மாணவர்களை உருவாக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை செயல்படும்.

21ஆம் நூற்றாண்டுத் திறன்கள்: கூர்சிந்தனை, சிக்கல் தீர்த்தல், கூட்டுப்பணி, தகவல் தொழில்நுட்பம், சுயதிறன் வளர்ப்பு, உலகப் பார்வை போன்ற திறன்கள் அனைத்துப் பாடத்திட்டங்களிலும் இணைக்கப்பட்டுள்ளன.

மதிப்பீட்டுச் சீர்திருத்தங்கள்: மாணவர்கள் ஒரு கருத்தைப் புரிந்துகொண்டு அதைச் செயல்படுத்தும் திறனை மதிப்பிடும் வகையில் தேர்வு முறைகள் மாற்றி அமைக்கப்படும். மதிப்பெண்களாக இல்லாமல் மதிப்பீடுகளை நோக்கி தேர்வுகள் அமையும்.

ஆசிரியர் திறன் மேம்பாடு: ஆசிரியர்களுக்குத் தொழில்நுட்பப் பயன்பாடு, உடனடிப் பயிற்சி, சக-ஆசிரியர்கள் வழிகாட்டுதல் மற்றும் சிறப்புக் குழுக்களுக்கான கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படும்.

பாதுகாப்பான சூழல்: பாதுகாப்பான வகுப்பறைகள், உடல் மற்றும் மன நலம் சார்ந்த கண்காணிப்பு, பாலின சமத்துவத்துக்கான வாய்ப்புகள் ஆகியவை உறுதி செய்யப்படும். அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு சிந்தனைகள் பள்ளிகளில் நுழைய அனுமதி மறுக்கப்படும்.

டிஜிட்டல் முறையிலான கல்வி: கல்வித் தொலைக்காட்சியும், மணற்கேணி செயலியும் ‘ஒவ்வொரு வீடும் ஒரு வகுப்பறை’ எனும் நிலையை உருவாக்கும்.

பாரம்பரியத்தையும் புதுமையையும் இணைக்கும் கல்வி: STEAM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை, கணிதம்) கலந்த பாடத்திட்டம், உள்ளூர் பண்பாடு, உலகப் பார்வை, மற்றும் சுற்றுச்சூழல் குறித்த சிந்தனைகள் ஆகியவை பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாடு: அனைத்துப் பள்ளிகளிலும் அறிவியல் ஆய்வகம், கணினி வசதிகள், குடிநீர், கழிப்பறைகள், விளையாட்டு மைதானம், நூலகம் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படும். ஒவ்வொரு ஒன்றியத்திலும் மாதிரிப் பள்ளிகள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்படும். பசுமைப் பள்ளிகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.

பள்ளி மேலாண்மை அதிகாரம்: பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (SMC), பெற்றோர்-ஆசிரியர் கழகம் (PTA), சமூக நலத்திட்டங்கள், முன்னாள் மாணவர்களின் பங்கு (“விழுதுகள்”), “நம்ம ஊரு நம்ம பள்ளி” போன்ற சமூகப் பங்கேற்புத் திட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025 வெளியீட்டு நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உட்பட தமிழக அமைச்சர்கள், அரசு உயர்நிலை அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow