விடாத மஞ்ஞுமல் பாய்ஸ் மோகம்.... விழுந்து வாரும் இளைஞர் கூட்டம்!

இரு வாரங்களுக்கு முன்னர் குன்னூரில் மஞ்ஞுமல் பாய்ஸ் பட எதிரொலியில்  டிரெக்கிங் சென்ற இளைஞர் 300 அடி மலை பள்ளத்தாக்கில் விழுந்து பலியான சோக சம்பவம் அரங்கேறியது

Mar 31, 2024 - 20:28
விடாத மஞ்ஞுமல் பாய்ஸ் மோகம்.... விழுந்து வாரும் இளைஞர் கூட்டம்!

மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்பட பாணியில் கொடைக்கானலில் மீண்டும் இளைஞர் ஒருவர் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த நிலையில், நண்பர்கள் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மலையாள படமான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் எதிரொலியாக கடந்த 2 மாதமாக கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு இளைஞர் கூட்டம் படையெடுத்து வருகிறது. குறிப்பாக குணா குகைக்கு சென்று கூட்டம் கூட்டமாக செல்ஃபி எடுப்பது மட்டுமின்றி பல ஆபத்தான செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி இரு வாரங்களுக்கு முன்னர் குன்னூரில் மஞ்ஞுமல் பாய்ஸ் பட எதிரொலியில்  டிரெக்கிங் சென்ற இளைஞர் 300 அடி மலை பள்ளத்தாக்கில் விழுந்து பலியான சோக சம்பவம் அரங்கேறியது. அதோடு இல்லாமல் குணா குகையின் தடை செய்யப்பட்ட பகுதிக்கு அத்துமீறி சென்ற 3 இளைஞர்கள் Facebook லைவ் செய்து சிலாகித்த நிலையில் கைது செய்யப்பட்டனர். 

இதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில்  உள்ள வட்டக்கானல் டால்பின் நோஸ் சுற்றுலாதளத்துக்கு, இளைஞர்கள் கூட்டம் ஒன்று வந்து  செல்ஃபி எடுத்து கொண்டிருந்தது. அப்போது பாறையின் முனையில் நின்ற இளைஞர் ஒருவர் கால் இடறி 100 அடி பள்ளத்தில் விழுந்தார். அப்போது உடனடியாக செயல்பட்ட சக நண்பர்கள் கீழே இறங்கிச்சென்று அவரை மீட்டனர். அதேவேளையில் விரைந்து தீயணைப்புத்துறையும் வந்துவிட அவரை சிறுகாயங்களுடான் மேலே அழைத்து வந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேவேளையில் வழக்குப்பதிவு செய்து போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் வட்டகானல் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.  

பொதுவாக இப்படியான தாக்கம் மிகுந்த திரைப்படங்களை ரசித்து பார்த்து செல்லாமல், அதனை நிஜ வாழ்வில் ருசித்து பார்க்க நினைக்கும் இளைஞர்களின் விபரீத செயல் கவலையளிப்பதாக தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், தங்களால் முடிந்த அளவுக்கு பாதுகாப்பான செயல்களில் செயல்படுவதே சிறந்தது என அறிவுறுத்துகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow