ஓபிஎஸ்-க்கு வாட்டர் பாட்டில் மரியாதை செய்தவர் ஈபிஎஸ்! ஈரோட்டில் முதலமைச்சர் விமர்சனம்..
அதிமுக, அவதூறு குதிரையில் ஏறி அரசியல் பயணம் செய்கிறது என்று முதலமைச்சர் விமர்சித்தார்.
ஈரோட்டில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆதரித்து பரபரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை, பச்சைப்பொய் பழனிசாமி, பாதம்தாங்கி பழனிச்சாமி என்றெல்லாம் கடுமையாக விமர்சித்தார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையத்தில், ‘உரிமை மீட்க ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். அதில், ஈரோடு திமுக வேட்பாளர் பிரகாஷ், கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, நாமக்கல் கொ.ம.தே.க வேட்பாளர் மாதேஸ்வரன் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் உரையாற்றினார்.
அப்போது, திமுகவின் நலத்திட்டங்களை எல்லாம் பொய்யாகத் திரித்துப் பேசும் அதிமுக, அவதூறு குதிரையில் ஏறி அரசியல் பயணம் செய்கிறது என்று விமர்சித்தார். அத்திகடவு அவிநாசி திட்டம் அதிமுக ஆட்சியில் அவசர கதியில் தொடங்கப்பட்டதாகக் கூறிய அவர், அதனை திமுக சீர் செய்துள்ளது என்றார். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பச்சைப்பொய் பழனிசாமி, பாதம்தாங்கி பழனிசாமி என்றெல்லாம் விமர்சித்தார். கடந்த அதிமுக தேர்தல் பரப்புரையின் போது அறிவிக்கப்பட்ட இலவச செல்போன், இலவச ஸ்கூட்டி, அம்மா வங்கி புத்தகம், பட்டு ஜவுளி பூங்கா போன்ற அறிவிப்புகள் செயல்படுத்தப்படவே இல்லை எனவும் பேசினார்.
இதெல்லாம் டிரெய்லர்தான் எனக்கூறிய முதலமைச்சர், ஒட்டுமொத்தமாக சொல்ல ஒருநாள் போதாது என்றார். அத்துடன் பாஜக இயக்கத்தில் செயல்படும் பழனிசாமி ஓபிஎஸ்-க்கு பொதுக்குழு கூட்டத்தில் வாட்டர்பாட்டில் மரியாதை செய்தவர் எனவும் சாடினார். மேலும், ஓபிஎஸ் மட்டுமில்லாமல், அவருக்கு பதவி வழங்கிய சசிகலா, கூட்டணியில் இருந்த ராமதாஸ் உள்ளிட்டவர்களை பழனிசாமி தாக்கி பேசியிருக்கிறார் எனவும் குற்றம்சாட்டினார். இப்படியெல்லாம் செய்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி தர்மம் பற்றிப் பேசலாமா என்றும் கேள்வியெழுப்பினார்.
What's Your Reaction?