தடுமாறிய ஹெலிகாப்டர்.. விபத்தில் இருந்து தப்பிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.. பீகாரில் பரபரப்பு
பீகாரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பியது. ஹெலிகாப்டர் லேசாக தடுமாறி பின்னர் மேலே பறந்து சென்றது.
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், வரும் வாரங்களில் மீதமுள்ள 5 கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. மக்களவை தேர்தலுக்கான பிரசாரத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க வியூகம் அமைத்துள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாவே அமித்ஷாவின் வீடுயோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.
பட்டியல் சாதிகள் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) வழங்கப்படும் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுவது போன்ற போலி வீடியோ ஒன்று இணையத்தில் பரவியது. பொதுக்கூட்டம் ஒன்றில் அமித் ஷா பேசிய வீடியோவை திரித்து இந்த வீடியோவை சிலர் வெளியிட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியது . இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் உள்துறை அமைச்சகம் புகார் அளித்தது. இதையடுத்து டெல்லி போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று திங்கள்கிழமை ( ஏப்ரல் 29) பீகார் மாநிலத்தில் பெகுசராய் பகுதியில் ஹெலிகாப்டரில் சென்ற போது லேசாக தடுமாறியது.
பீகார் மாநிலம் பெகுசாராய் என்ற பகுதியில் நடைபெற்ற பேரணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியையையும் இந்தியா கூட்டணி கட்சியையும் கடுமையாக சாடினார். தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு அமித்ஷா ஹெலிகாப்டரில் பயணம் செய்தார். ஹெலிகாப்டர் புறப்பட்டபோது மேலே செல்ல முடியாமல் அந்தரத்தில் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறியது. சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் சீராக வானில் பறந்தது.
சிறிது நேரம் கட்டுப்பாட்டை இழந்த பின்னர் சீராக இயங்கியதால், அதிர்ஷ்டவசமாக அமித்ஷா உயிர் தப்பினார். தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் சிறிதுநேரம் கட்டுப்பாட்டை இழந்ததா அல்லது காற்று காரணமாக கட்டுப்பாட்டை இழந்ததா என விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?