குழந்தை கடத்தல் என நினைத்து சிறைபிடிப்பு...சாமியார் என்று தெரிந்ததும் ஆசிபெற்ற போலீசார்...
புதுக்கோட்டையில் வழி தெரியாமல் கிராமத்திற்குள் நுழைந்த வடமாநில சாமியார்களை குழந்தை கடத்த வந்ததாக நினைத்து பொதுமக்கள் ரவுண்டு கட்டிய நிலையில், அவரை மீட்டு ஆசிபெற்று போலீசார் அனுப்பிவைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேட்டுப்பட்டி கிராமத்தில் பொலிரோ காரில் சென்ற சாமியார்கள் சிலர், அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களிடம் பேசிக் கொண்டிருந்ததை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பார்த்துள்ளனர். இதையடுத்து அவர்களை பொதுமக்கள் சிறைபிடிக்க முற்பட்டதால் வேகமாக காருக்குள் ஏறி அங்கிருந்து புறப்பட்டனர். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள், இருசக்கர வாகனம் மூலம் அவர்களை துரத்தி சென்று விராலிமலை -இனாம்குளத்தூர் சாலையில் வழிமறித்து சிறைபிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த போலீசார், விராலிமலை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இதில் வடமாநில சாமியார்கள் ராமேஸ்வரம் கோயிலில் சிவராத்திரி முடித்துக் கொண்டு சேலம் செல்வதற்காக கூகுள் மேப்பை பயன்படுத்தியதாகவும், மேப் காட்டிய வழியில்தான் மணமேட்டுப்பட்டிக்கு சென்றதாகவும் விளக்கம் அளித்தனர். இதையடுத்து அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்ற போலீசார் பத்திரமாக அனுப்பிவைத்தனர். விசாரணைக்கு அழைத்து வந்த சாமியார்களிடம் ஆசீர்வாதம் வாங்கிய போலீசாரின் செயல் அப்பகுதியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
What's Your Reaction?