கரூர், திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா
கரூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகளைத் தமிழ்நாடு அரசு தொடங்கியிருக்கிறது.
இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. 2030ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை நிர்ணயித்துள்ள தமிழக அரசு அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அமெரிக்காவுக்குச் சென்று 19 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொண்டு 7616 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து வந்தார்.
தரமணியில் தொடங்கப்பட்ட டைடல் பார்க் எப்படி தமிழகத்தை தகவல் தொழில்நுட்பத்துறையில் வளமான மாநிலமாக்கியதோ அதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும் டைடல் பூங்காக்கள் அமைக்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தினார். அதன் முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. 30.5 கோடி செலவில், தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்கா மற்றும் 29.5 கோடி செலவில் சேலம் மாவட்டம் கருப்பூர் கிராமத்தில் கட்டப்பட்டிருக்கும் மினி டைடல் பூங்கா ஆகியவற்றை இம்மாதம் 23ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கரூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கான முதற்கட்டப் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. கரூர் மற்றும் திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான வரைபடத் தயாரிப்பு மற்றும் திட்ட மேலாண்மைப் பணிக்கு ஆலோசகர்களைத் தேர்வு செய்ய டெண்டர் கோரியுள்ளது. இந்த மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படுவதன் மூலமாக அங்கு ஐடி துறையில் தலா 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?