”நான் கொத்தனார் மகன் தான்.. இதுவே எனது அடையாளம்..” - பட்டென பதிலளித்த இயக்குநர்

என்றும் கொத்தனாரின் மகன் என்பதே என் அடையாளம் என தெரிவித்துள்ளார் லப்பர் பந்து திரைப்படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து.

Sep 28, 2024 - 16:16
”நான் கொத்தனார் மகன் தான்.. இதுவே எனது அடையாளம்..” - பட்டென பதிலளித்த இயக்குநர்

என்றும் கொத்தனாரின் மகன் என்பதே என் அடையாளம் என தெரிவித்துள்ளார் லப்பர் பந்து திரைப்படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து.

சமீபத்தில் தமிழகம் முழுவதும் வெளியான ரப்பர்பந்த் படம் குறித்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், தினேஷ் ஆகியோர் திரையரங்கு சென்று படத்தின் வரவேற்பு குறித்து கேட்டு வருகின்றனர். லப்பர் பந்து திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வரும் நிலையில், அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள தனியார் திரையரங்கில் படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து மற்றும் படத்தின் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்த மகிழ்ந்தனர். 

தொடர்ந்து, படத்தின் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் மற்றும் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர். நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசுகையில், ”மதுரை மக்களுக்கு பெரிய நன்றிகள் லப்பர் பந்து திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. எதிர்பார்த்ததை விட பெரிய அன்பும், பேராதர்வும் கிடைத்து வருகிறது. 

சினிமா ரசிகர்களுக்கும், மக்களுக்கும் மிக்க நன்றி. மதுரை வந்ததற்கு கூடுதல் காரணம், எந்த படமாக இருந்தாலும் அதன் வெற்றியை முடிவு செய்வதில் மதுரை முக்கிய தளமாக இருக்கிறது.

தற்போது இந்த படம் மதுரையிலும் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து மதுரை மக்களை சந்திக்கவே இங்கு வந்தோம். தியேட்டரில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது, அனைவரும் திரையரங்கில் படத்தை மகிழ்ச்சியுடன் பார்க்கிறார்கள்”, என்றார்.

படத்தின் கதையை தேர்வு செய்வதில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதே?

ஹரிஷ் கல்யாண்: “நல்ல இயக்குனர்கள் நல்ல கதையுடன் வருகிறார்கள் அவர்களை தவற விட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் பார்க்கிங், லப்பர் பந்து போன்ற படத்தை தேர்வு செய்தேன். 

முன்னதாக நடித்த படத்திலிருந்து மாறுபட்டு நடிக்க வேண்டும். ரசிகர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தை தேர்வு செய்து வருகிறேன். லப்பர் பந்து படத்தின் வாழ்வியலும் கதைக்களமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நோக்கத்தோடு தான் இந்த படத்தை தேர்வு செய்தேன். மேலும் கிரிக்கெட், கிராமம் சார்ந்த கதைக்களம் என அனைத்தும் இருந்ததால் லப்பர் பந்து படத்தை தேர்வு செய்தேன்” என தெரிவித்துள்ளார்.

அஜித் பிடிக்குமா விஜய் பிடிக்குமா.? 

 “நான் தீவிர விஜய் ரசிகர் இருப்பினும் எனக்கு அஜித் சார் மிகப் பிடிக்கும், இதில் பாகுபாடு எதுவும் இல்லை என ஹரிஷ் கல்யாண் குறிப்பிட்டார்.

இவரைத் தொடர்ந்து, இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து பேசுகையில், ”படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள், மீடியா நண்பர்கள் அனைவர்களுக்கும் நன்றி என்றார். 

ஐயப்பன் கோஷியும், டிரைவிங் லைசன்ஸ் போன்று ஈகோ சென்ட்ரிக் படமாக இதுவும் அமைந்துள்ளது.? உங்களுக்கு அந்த படங்கள் பிடிக்குமா?

இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து: ”எனக்கு ஐயப்பன் கோசியும் மிகப் பிடிக்கும். அந்த கதையை ஐடியாவாக வைத்து இந்த மாதிரி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று எண்ணினேன்., என்னிடம் கிரிக்கெட்தான் இருந்தது. எனவே கிரிக்கெட்டை மையமாக வைத்து அதே போன்று ஒரு படம் எடுத்தேன். கிரிக்கெட் விளையாடாதவர்கள் இந்தியாவில் யாராவது இருக்கிறார்களா” 

”நாங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் வலைதளத்தில் டவுன்லோட் செய்து பார்ப்பவர்கள் அவர்களாக மாற வேண்டும். எங்களின் உழைப்பை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சிலர் இன்னும் வலைதளத்தில் பதிவு செய்து பார்ப்பது வருத்தம் அளிக்கிறது” என்றார். 

மாரி செல்வராஜ் படங்களில் சாதியை தழுவிய கதைக்களம் உள்ளதே?

இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து: “மாரி செல்வராஜ் போன்ற நபர்கள் சந்தித்த அளவு ஜாதி ரீதியான பிரச்சினைகளை கூட நான் சந்தித்ததில்லை. எனக்கு தெரியாத ஒரு விஷயத்தை இதுதான் சரி என்று என்னால் எடுக்க முடியாது. அவர்கள் அரசியல் நிலவரம் ரீதியாகவும் அனுபவம் ரீதியாகவும் வலுவாக இருப்பதால் அப்படி திரைப்படம் எடுக்கிறார்கள். நான் அரசியல் ரீதியாக அவ்வளவு அழுத்தமாக அனுபவித்ததில்லை. மேலும் கதைக்கு இவ்வளவு தான் தேவைப்பட்டது. சாதி என்பது அனைத்து ஊரிலும் உள்ளது எனவே, அதை தழுவி எடுத்துள்ளேன்” என கூறினார். 

ட்விட்டரில் கொத்தனாரின் மகன் என வைத்துள்ளீர்கள்?

இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து: என் அப்பா கொத்தனார் தான். என் ஊரிலும் தெருவிலும் என்னை கொத்தனார் மகன் என்றுதான் கூப்பிடுவார்கள். எனவே நான் கொத்தனாரின் மகன் என ட்விட்டரில் வைத்துள்ளேன். இதுதான் என் அடையாளமாக இருந்தது எனவே அதை அப்படியே ட்விட்டரில் வைத்துள்ளேன்.

இளம் இயக்குனர்கள் ஒரு படம் எடுத்து வெற்றி பெற்றவுடன் அடுத்த படமே பெரிய ஹீரோவை நோக்கி செல்கிறார்களே.?

இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து: “வெளியே இருந்து பார்க்கும்போது தான் சின்ன ஹீரோ பெரிய ஹீரோ என்று தெரிகிறது. இது பெரிய செயல்முறை நான் அந்த வளையில் சிக்க மாட்டேன். நான் கதைக்கான கதாநாயகனையே தேர்வு செய்கிறேன். 

லப்பர் பந்து படம் பார்த்த பிறகு சிவகார்த்திகேயன், சிம்பு, கார்த்தி உள்ளிட்டோர் வாழ்த்து கூறினர். கண்டிப்பாக இன்னும் ஒரு படம் ஹரிஷ் கல்யாணை கதாநாயகனாக வைத்து ஒரு படம் எடுப்பேன். பழக்கத்திற்கு எதுவும் தேவையில்லை, படத்திற்கு கதை தேவை அது கிடைத்தவுடன் கண்டிப்பாக ஹரிஷ் கல்யாணை வைத்து படம் எடுப்பேன்” என்று தெரிவித்தார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow