வல்லமை திரைவிமர்சனம்: 15 வயது சிறுமிக்குத் தந்தையாக பிரேம்ஜி.. காலத்துக்கேற்ற கதை
பின்னணி பாடகராகவும், நகைச்சுவை நடிகராகவும் பரீட்சையமான பண்ணைப்புர பாய்ஸின் குறும்பு பிரேம்ஜி அவ்வப்போது கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியாகியுள்ள வல்லமை திரைப்படம் குறித்த குமுதம் விமர்சனம் இதோ..

மனைவி இறந்த சோகம் தாங்காமல், கிராமத்தில் இருந்து சென்னைக்கு தன் ஒரே மகளுடன் வருகிறார், பிரேம்ஜி. அவருக்கு ஒரு வீடு பார்த்துக் கொடுத்து, போஸ்டர் ஒட்டும் வேலையும் வாங்கிக் கொடுத்து உதவி செய்கிறார் ஒரு ஆட்டோக்காரர். பருவம் அடையும் வயதில் இருக்கும் மகளை, அரசுப் பள்ளியில் சேர்த்துவிட்டு, தன் நகரத்து வாழ்க்கையை நன்றாகவே தொடங்குகிறார், பிரேம்ஜி.
அதற்குப் பின் நடக்கும் ஒரு சம்பவம், அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடுகிறது. அப்பாவி கிராமத்து மனிதர்களான அவர்களை, கொலை செய்யத் தூண்டும் அளவிற்கு, அப்படி என்ன நடந்தது, அதை யார் செய்தது? என்பதுதான் கதை.
15 வயது சிறுமிக்குத் தந்தையாக பிரேம்ஜி நன்றாக நடித்திருந்தாலும், அவரின் கொலை முயற்சி காட்சிகளும், நடிப்பும் படு காமெடி. மகளாக வரும் சிறுமி திவ்யதர்ஷினியிடம் டேலன்ட் நிறைய இருக்கிறது, அதைக் காட்டுவதற்கான வாய்ப்புகள்தான் படத்தில் குறைவு. தீபா சங்கர் அடக்கி வாசித்திருப்பது, சிறப்பு.
காலத்துக்கேற்ற கதை... ஆனால், காட்சி அமைப்பும், திரைக்கதையும் ரொம்ப சுமார். இயக்குநர், தயாரிப்பாளர் கருப்பையா முருகன் அதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். இசை ஜி.கே.வி. இளையராஜாவின் சாயல் நிறையவே தெரிகிறது. பின்னணி இசைதான் படத்தின் பலம். ஒளிப்பதிவு, எடிட்டிங் ரொம்ப சுமார். அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள் எல்லாம் தேவை இல்லாத ஆணி. அப்பாவும் மகளும் வில்லனின் டிரைவரை ஆட்டோவில் கடத்தி மிரட்டுவதெல்லாம் கிரேஸி மோகன் காமெடி, சிரிக்கத்தான் முடியவில்லை.
மொத்தத்தில் 'வல்லமை' - சத்துக் குறைவு!
What's Your Reaction?






